அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு

Tamil Translation - Omar Sharif

Scan the qr code to link to this page

سورة غافر - ஸூரா (g)காஃபிர்

பக்க எண்

வசனம்

வசனத்தின் உரை நடையை காண்பிக்கவும்
அடிக்குறிப்பைக் காண்பிக்கவும்

வசனம் : 1
حمٓ
ஹா மீம்.
வசனம் : 2
تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡعَلِيمِ
மிகைத்தவனும் நன்கறிந்தவனுமாகிய அல்லாஹ்வின் புறத்தில் இருந்து இறக்கப்பட்ட வேதமாகும் (இது).
வசனம் : 3
غَافِرِ ٱلذَّنۢبِ وَقَابِلِ ٱلتَّوۡبِ شَدِيدِ ٱلۡعِقَابِ ذِي ٱلطَّوۡلِۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ إِلَيۡهِ ٱلۡمَصِيرُ
(அவன்) பாவங்களை மன்னிப்பவன், (அடியார்கள் பாவங்களைவிட்டு விலகி) திருந்தி மன்னிப்புக் கோருதலை அங்கீகரிப்பவன், (திருந்தாத பாவிகளை) தண்டிப்பதில் கடுமையானவன், (நல்லவர்கள் மீது) அருளுடையவன். அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் பக்கமே மீளுதல் இருக்கிறது.
வசனம் : 4
مَا يُجَٰدِلُ فِيٓ ءَايَٰتِ ٱللَّهِ إِلَّا ٱلَّذِينَ كَفَرُواْ فَلَا يَغۡرُرۡكَ تَقَلُّبُهُمۡ فِي ٱلۡبِلَٰدِ
நிராகரித்தவர்களைத் தவிர அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் விவாதம் செய்ய மாட்டார்கள். ஆகவே, (நபியே) நகரங்களில் அவர்கள் (சுகமாக) சுற்றித்திரிவது உம்மை மயக்கிவிட வேண்டாம்.
வசனம் : 5
كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَٱلۡأَحۡزَابُ مِنۢ بَعۡدِهِمۡۖ وَهَمَّتۡ كُلُّ أُمَّةِۭ بِرَسُولِهِمۡ لِيَأۡخُذُوهُۖ وَجَٰدَلُواْ بِٱلۡبَٰطِلِ لِيُدۡحِضُواْ بِهِ ٱلۡحَقَّ فَأَخَذۡتُهُمۡۖ فَكَيۡفَ كَانَ عِقَابِ
இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்களும் அவர்களுக்குப் பின்னர் வந்த (ஆது, ஸமூது, ஃபிர்அவ்ன் இன்னும் பல) குழுக்களும் (தூதர்களை) பொய்ப்பித்தனர். எல்லா சமுதாயத்தினரும் தங்களது தூதரை தண்டிப்பதற்கு(ம் கொல்வதற்கும்) உறுதிபூண்டார்கள். இன்னும், அசத்தியத்தைக் கொண்டு (சத்தியத்தில்) தர்க்கம் செய்தனர், அதன் மூலம் சத்தியத்தை அழிப்பதற்காக. ஆகவே, நான் அவர்களை (எனது தண்டனையைக் கொண்டு) பிடித்தேன். ஆக, எனது தண்டனை எப்படி இருந்தது?
வசனம் : 6
وَكَذَٰلِكَ حَقَّتۡ كَلِمَتُ رَبِّكَ عَلَى ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَنَّهُمۡ أَصۡحَٰبُ ٱلنَّارِ
இவ்வாறுதான் நிராகரித்தவர்கள் மீது – “நிச்சயமாக அவர்கள் நரகவாசிகள்” என்று - உமது இறைவனின் வாக்கு உறுதியாகிவிட்டது.
வசனம் : 7
ٱلَّذِينَ يَحۡمِلُونَ ٱلۡعَرۡشَ وَمَنۡ حَوۡلَهُۥ يُسَبِّحُونَ بِحَمۡدِ رَبِّهِمۡ وَيُؤۡمِنُونَ بِهِۦ وَيَسۡتَغۡفِرُونَ لِلَّذِينَ ءَامَنُواْۖ رَبَّنَا وَسِعۡتَ كُلَّ شَيۡءٖ رَّحۡمَةٗ وَعِلۡمٗا فَٱغۡفِرۡ لِلَّذِينَ تَابُواْ وَٱتَّبَعُواْ سَبِيلَكَ وَقِهِمۡ عَذَابَ ٱلۡجَحِيمِ
அர்ஷை சுமப்பவர்களும் அதைச் சுற்றி இருப்பவர்களும் தங்கள் இறைவனின் புகழை துதிக்கிறார்கள். இன்னும், அவனை நம்பிக்கை கொள்கிறார்கள். மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருகிறார்கள், “எங்கள் இறைவா! எல்லாவற்றையும் நீ கருணையாலும் கல்வியாலும் விசாலமடைந்து இருக்கின்றாய். ஆகவே, (இணைவைப்பு, நிராகரிப்பு, இன்னும் பாவங்களை விட்டு) திருந்தி, உன் பக்கம் திரும்பி, உனது மார்க்கத்தை பின்பற்றியவர்களை நீ மன்னிப்பாயாக! அவர்களை நரகத்தின் தண்டனையை விட்டு பாதுகாப்பாயாக!”

வசனம் : 8
رَبَّنَا وَأَدۡخِلۡهُمۡ جَنَّٰتِ عَدۡنٍ ٱلَّتِي وَعَدتَّهُمۡ وَمَن صَلَحَ مِنۡ ءَابَآئِهِمۡ وَأَزۡوَٰجِهِمۡ وَذُرِّيَّٰتِهِمۡۚ إِنَّكَ أَنتَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
எங்கள் இறைவா! இன்னும் அவர்களை அத்ன் சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வாயாக! அதை நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கிறாய். இன்னும், அவர்களின் பெற்றோர்கள், அவர்களின் மனைவிகள், அவர்களின் சந்ததிகளில் நல்லவர்களாக இருந்தவர்கள் அனைவரையும் (சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வாயாக)! நிச்சயமாக நீதான் மிகைத்தவன், மகா ஞானவான்.
வசனம் : 9
وَقِهِمُ ٱلسَّيِّـَٔاتِۚ وَمَن تَقِ ٱلسَّيِّـَٔاتِ يَوۡمَئِذٖ فَقَدۡ رَحِمۡتَهُۥۚ وَذَٰلِكَ هُوَ ٱلۡفَوۡزُ ٱلۡعَظِيمُ
இன்னும், அவர்களை தீமைகளிலிருந்து (தண்டனைகளிலிருந்து) பாதுகாப்பாயாக! அன்றைய தினம் எவரை நீ தண்டனைகளிலிருந்து பாதுகாப்பாயோ திட்டமாக அவர் மீது நீ கருணை புரிந்துவிட்டாய். அதுதான் மகத்தான நற்பாக்கியமாகும்.
வசனம் : 10
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ يُنَادَوۡنَ لَمَقۡتُ ٱللَّهِ أَكۡبَرُ مِن مَّقۡتِكُمۡ أَنفُسَكُمۡ إِذۡ تُدۡعَوۡنَ إِلَى ٱلۡإِيمَٰنِ فَتَكۡفُرُونَ
நிச்சயமாக நிராகரிப்பவர்கள் (நரகத்தில்) சப்தமிட்டு அழைக்கப்படுவார்கள்: “நீங்கள் உங்களை கோபிப்பதை விட அல்லாஹ் (உங்களை) கோபிப்பது மிகப் பெரியதாகும். நீங்கள் நம்பிக்கை கொள்வதற்கு அழைக்கப்பட்டபோது (அதை) நிராகரித்தீர்கள்.”
வசனம் : 11
قَالُواْ رَبَّنَآ أَمَتَّنَا ٱثۡنَتَيۡنِ وَأَحۡيَيۡتَنَا ٱثۡنَتَيۡنِ فَٱعۡتَرَفۡنَا بِذُنُوبِنَا فَهَلۡ إِلَىٰ خُرُوجٖ مِّن سَبِيلٖ
அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நீ எங்களுக்கு இருமுறை மரணத்தைக் கொடுத்தாய். இன்னும், இருமுறை எங்களுக்கு வாழ்க்கையைக் கொடுத்தாய். ஆக, நாங்கள் எங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டோம். ஆகவே, (நரகத்தில் இருந்து) வெளியேறுவதற்கு ஏதேனும் வழி உண்டா?”
வசனம் : 12
ذَٰلِكُم بِأَنَّهُۥٓ إِذَا دُعِيَ ٱللَّهُ وَحۡدَهُۥ كَفَرۡتُمۡ وَإِن يُشۡرَكۡ بِهِۦ تُؤۡمِنُواْۚ فَٱلۡحُكۡمُ لِلَّهِ ٱلۡعَلِيِّ ٱلۡكَبِيرِ
இது ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், அவன் ஒருவன் மட்டும் அழைக்கப்பட்டால் நீங்கள் (அவனை ஏற்காமல்) நிராகரித்தீர்கள். அவனுக்கு இணைவைத்து வணங்கப்பட்டால் (அவனை) நம்பிக்கை கொள்கிறீர்கள். ஆக, எல்லா அதிகாரமும் (ஆட்சியும்) மிக உயர்ந்தவனும் மிகப் பெரியவனுமாகிய அல்லாஹ்வுக்கே உரியது. (அப்படியிருக்க அவனல்லாதவர்களை எப்படி வணங்க முடியும்.)
வசனம் : 13
هُوَ ٱلَّذِي يُرِيكُمۡ ءَايَٰتِهِۦ وَيُنَزِّلُ لَكُم مِّنَ ٱلسَّمَآءِ رِزۡقٗاۚ وَمَا يَتَذَكَّرُ إِلَّا مَن يُنِيبُ
அவன்தான் தனது அத்தாட்சிகளை உங்களுக்கு காண்பிக்கிறான். இன்னும், வானத்திலிருந்து உங்களுக்கு உணவை (-வாழ்வாதாரத்தின் மூலதனமாகிய மழையை) இறக்குகிறான். அல்லாஹ்வின் பக்கம் திரும்புகிறவர்களைத் தவிர (இதன் மூலம்) நல்லுபதேசம் பெற மாட்டார்கள்.
வசனம் : 14
فَٱدۡعُواْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ وَلَوۡ كَرِهَ ٱلۡكَٰفِرُونَ
ஆகவே, அல்லாஹ்வை - அவனுக்கு மார்க்கத்தை (-வழிபாடுகளை) பரிசுத்தமாக்கியவர்களாக - அழையுங்கள்! (இணைவைக்கின்ற) நிராகரிப்பாளர்கள் (அதை) வெறுத்தாலும் சரியே!
வசனம் : 15
رَفِيعُ ٱلدَّرَجَٰتِ ذُو ٱلۡعَرۡشِ يُلۡقِي ٱلرُّوحَ مِنۡ أَمۡرِهِۦ عَلَىٰ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦ لِيُنذِرَ يَوۡمَ ٱلتَّلَاقِ
அவன் (அடியார்களின்) அந்தஸ்துகளை உயர்த்தக் கூடியவன், அர்ஷுடையவன். தனது அடியார்களில் தான் நாடியவர் மீது தனது கட்டளைகளை உள்ளடக்கிய வஹ்யை இறக்குவான் (உலகத்தார் எல்லோரும்) சந்திக்கின்ற (மறுமை) நாளைப் பற்றி (மக்களை) அவர் எச்சரிப்பதற்காக.
வசனம் : 16
يَوۡمَ هُم بَٰرِزُونَۖ لَا يَخۡفَىٰ عَلَى ٱللَّهِ مِنۡهُمۡ شَيۡءٞۚ لِّمَنِ ٱلۡمُلۡكُ ٱلۡيَوۡمَۖ لِلَّهِ ٱلۡوَٰحِدِ ٱلۡقَهَّارِ
அந்நாளில் அவர்கள் (கப்ருகளில் இருந்து) வெளிப்பட்டு நிற்பார்கள். அவர்களில் எதுவும் அல்லாஹ்வின் முன்னால் மறைந்துவிடாது. “இன்று ஆட்சி யாருக்கு உரியது?” (என்று அவன் கேட்பான். பதில் அளிப்பவர் யாரும் இருக்க மாட்டார். அவனே பதில் அளிப்பான்:) “(நிகரற்ற) ஒருவனாகிய, (அனைவரையும்) அடக்கி ஆளுகிறவனாகிய அல்லாஹ்விற்கே உரியது ஆட்சி அனைத்தும்.”

வசனம் : 17
ٱلۡيَوۡمَ تُجۡزَىٰ كُلُّ نَفۡسِۭ بِمَا كَسَبَتۡۚ لَا ظُلۡمَ ٱلۡيَوۡمَۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ
இன்று எல்லா ஆன்மாவுக்கும் அவை செய்ததற்கு பதிலாக கூலி கொடுக்கப்படும். இன்று (யார் மீதும்) அறவே அநியாயம் இருக்காது. நிச்சயமாக அல்லாஹ் விசாரிப்பதில் மிக விரைவானவன் ஆவான்.
வசனம் : 18
وَأَنذِرۡهُمۡ يَوۡمَ ٱلۡأٓزِفَةِ إِذِ ٱلۡقُلُوبُ لَدَى ٱلۡحَنَاجِرِ كَٰظِمِينَۚ مَا لِلظَّٰلِمِينَ مِنۡ حَمِيمٖ وَلَا شَفِيعٖ يُطَاعُ
இன்னும், நெருங்கி வரக்கூடிய (மறுமை) நாளைப் பற்றி அவர்களை நீர் எச்சரிப்பீராக! உள்ளங்கள் (பயத்தால்) தொண்டைகளுக்கு அருகில் வந்துவிடும்போது அவர்கள் துக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். அந்த அநியாயக்காரர்களுக்கு நண்பர் எவரும் இருக்கமாட்டார். (பரிந்துரை) ஏற்றுக்கொள்ளப்படும்படியான பரிந்துரையாளரும் இருக்க மாட்டார்.
வசனம் : 19
يَعۡلَمُ خَآئِنَةَ ٱلۡأَعۡيُنِ وَمَا تُخۡفِي ٱلصُّدُورُ
கண்களின் மோசடிகளையும் நெஞ்சங்கள் மறைப்பதையும் அவன் நன்கறிவான்.
வசனம் : 20
وَٱللَّهُ يَقۡضِي بِٱلۡحَقِّۖ وَٱلَّذِينَ يَدۡعُونَ مِن دُونِهِۦ لَا يَقۡضُونَ بِشَيۡءٍۗ إِنَّ ٱللَّهَ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ
இன்னும், அல்லாஹ் உண்மையை (நீதமான தீர்ப்பை)த்தான் தீர்ப்பளிக்கிறான். அவனை அன்றி அவர்கள் எவர்களை அழைக்கிறார்களோ (-வணங்குகிறார்களோ) அவர்கள் எதையும் தீர்ப்பளிக்க மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.
வசனம் : 21
۞ أَوَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ كَانُواْ مِن قَبۡلِهِمۡۚ كَانُواْ هُمۡ أَشَدَّ مِنۡهُمۡ قُوَّةٗ وَءَاثَارٗا فِي ٱلۡأَرۡضِ فَأَخَذَهُمُ ٱللَّهُ بِذُنُوبِهِمۡ وَمَا كَانَ لَهُم مِّنَ ٱللَّهِ مِن وَاقٖ
இவர்கள் பூமியில் சுற்றுப் பயணம் செய்யவில்லையா? (அப்படி செய்திருந்தால்) தங்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று இவர்கள் பார்த்திருப்பார்களே! அவர்கள் இவர்களை விட (உடல்) வலிமையால் மிக பலசாலிகளாகவும் பூமியில் (-மாடமாளிகைகள், தொழிற்சாலைகள் போன்ற) அடையாளங்களால் மிக அதிகமானவர்களாகவும் இருந்தார்கள். ஆக, அவர்களின் பாவங்களினால் அல்லாஹ் அவர்களை தண்டித்தான். அல்லாஹ்விடமிருந்து அவர்களை பாதுகாப்பவர் எவரும் இருக்கவில்லை.
வசனம் : 22
ذَٰلِكَ بِأَنَّهُمۡ كَانَت تَّأۡتِيهِمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ فَكَفَرُواْ فَأَخَذَهُمُ ٱللَّهُۚ إِنَّهُۥ قَوِيّٞ شَدِيدُ ٱلۡعِقَابِ
அதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் - அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்து கொண்டிருந்தார்கள். ஆக, அவர்கள் நிராகரித்தார்கள். ஆகவே, அல்லாஹ் அவர்களை தண்டித்தான். நிச்சயமாக அவன் வலிமை மிக்கவன், தண்டிப்பதில் கடுமையானவன்.
வசனம் : 23
وَلَقَدۡ أَرۡسَلۡنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَا وَسُلۡطَٰنٖ مُّبِينٍ
திட்டவட்டமாக மூஸாவை நமது அத்தாட்சிகளுடன் இன்னும் தெளிவான ஆதாரத்துடன் அனுப்பினோம்,
வசனம் : 24
إِلَىٰ فِرۡعَوۡنَ وَهَٰمَٰنَ وَقَٰرُونَ فَقَالُواْ سَٰحِرٞ كَذَّابٞ
ஃபிர்அவ்ன், ஹாமான் இன்னும் காரூனிடம் (மூஸாவை அனுப்பினோம்). ஆக, அவர்கள் (அவரை) சூனியக்காரர், பெரும் பொய்யர் என்று கூறினார்கள்.
வசனம் : 25
فَلَمَّا جَآءَهُم بِٱلۡحَقِّ مِنۡ عِندِنَا قَالُواْ ٱقۡتُلُوٓاْ أَبۡنَآءَ ٱلَّذِينَ ءَامَنُواْ مَعَهُۥ وَٱسۡتَحۡيُواْ نِسَآءَهُمۡۚ وَمَا كَيۡدُ ٱلۡكَٰفِرِينَ إِلَّا فِي ضَلَٰلٖ
ஆக, அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டுவந்தபோது அவர்கள் கூறினார்கள்: “இவருடன் நம்பிக்கை கொண்டவர்களின் ஆண் பிள்ளைகளைக் கொன்று விடுங்கள்! அவர்களின் பெண்(பிள்ளை)களை வாழவிடுங்கள்!” (இத்தகைய அநியாயம் செய்கிற) நிராகரிப்பவர்களின் சூழ்ச்சிகள் (எல்லாம்) வழிகேட்டில் தவிர இல்லை.

வசனம் : 26
وَقَالَ فِرۡعَوۡنُ ذَرُونِيٓ أَقۡتُلۡ مُوسَىٰ وَلۡيَدۡعُ رَبَّهُۥٓۖ إِنِّيٓ أَخَافُ أَن يُبَدِّلَ دِينَكُمۡ أَوۡ أَن يُظۡهِرَ فِي ٱلۡأَرۡضِ ٱلۡفَسَادَ
இன்னும், ஃபிர்அவ்ன் கூறினான்: “என்னை விடுங்கள், நான் மூஸாவை கொன்று விடுகிறேன். அவர் தன் இறைவனை (உதவிக்கு) அழைக்கட்டும். அவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது, இந்த பூமியில் குழப்பத்தை உருவாக்கி விடுவார் என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.”
வசனம் : 27
وَقَالَ مُوسَىٰٓ إِنِّي عُذۡتُ بِرَبِّي وَرَبِّكُم مِّن كُلِّ مُتَكَبِّرٖ لَّا يُؤۡمِنُ بِيَوۡمِ ٱلۡحِسَابِ
மூஸா கூறினார்: “நிச்சயமாக நான் எனது இறைவனிடம், இன்னும் உங்கள் இறைவனிடம் விசாரணை நாளை நம்பிக்கை கொள்ளாமல் பெருமை அடிக்கிற எல்லோரை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.”
வசனம் : 28
وَقَالَ رَجُلٞ مُّؤۡمِنٞ مِّنۡ ءَالِ فِرۡعَوۡنَ يَكۡتُمُ إِيمَٰنَهُۥٓ أَتَقۡتُلُونَ رَجُلًا أَن يَقُولَ رَبِّيَ ٱللَّهُ وَقَدۡ جَآءَكُم بِٱلۡبَيِّنَٰتِ مِن رَّبِّكُمۡۖ وَإِن يَكُ كَٰذِبٗا فَعَلَيۡهِ كَذِبُهُۥۖ وَإِن يَكُ صَادِقٗا يُصِبۡكُم بَعۡضُ ٱلَّذِي يَعِدُكُمۡۖ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي مَنۡ هُوَ مُسۡرِفٞ كَذَّابٞ
ஃபிர்அவ்னுடைய குடும்பத்தாரில் உள்ள நம்பிக்கை கொண்ட ஓர் ஆடவர் தனது நம்பிக்கையை மறைத்தவராகக் கூறினார்: “ஒரு மனிதரை - அல்லாஹ்தான் என் இறைவன் என்று அவர் கூறியதற்காக - நீங்கள் கொல்கிறீர்களா? அவர் திட்டமாக தெளிவான அத்தாட்சிகளை உங்கள் இறைவனிடமிருந்து உங்களிடம் கொண்டு வந்திருக்கிறார். அவர் பொய்யராக இருந்தால் அவருடைய பொய் அவருக்குத்தான் கேடாக அமையும். அவர் உண்மையாளராக இருந்தால் அவர் எச்சரிக்கின்ற சில (தண்டனை) உங்களை வந்தடையும். நிச்சயமாக எவர் எல்லை மீறி பாவம் செய்பவராகவும் பெரும் பொய்யராகவும் இருக்கிறாரோ அவரை அல்லாஹ் நேர்வழி செலுத்தமாட்டான்.”
வசனம் : 29
يَٰقَوۡمِ لَكُمُ ٱلۡمُلۡكُ ٱلۡيَوۡمَ ظَٰهِرِينَ فِي ٱلۡأَرۡضِ فَمَن يَنصُرُنَا مِنۢ بَأۡسِ ٱللَّهِ إِن جَآءَنَاۚ قَالَ فِرۡعَوۡنُ مَآ أُرِيكُمۡ إِلَّا مَآ أَرَىٰ وَمَآ أَهۡدِيكُمۡ إِلَّا سَبِيلَ ٱلرَّشَادِ
“எனது மக்களே! உங்களுக்கு ஆட்சி இன்று இருக்கிறது. நீங்கள் பூமியில் மிகைத்திருக்கிறீர்கள். அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து - அது நம்மிடம் வந்தால் - யார் நமக்கு உதவுவார்?” (இவ்வாறு அவர் கூறினார்.) (அதற்கு) ஃபிர்அவ்ன் கூறினான்: “நான் (நல்லதாகக்) கருதுவதைத் தவிர உங்களுக்கு நான் காண்பிக்க மாட்டேன். இன்னும், நேரான பாதையைத் தவிர உங்களுக்கு நான் வழிகாட்ட மாட்டேன்.”
வசனம் : 30
وَقَالَ ٱلَّذِيٓ ءَامَنَ يَٰقَوۡمِ إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُم مِّثۡلَ يَوۡمِ ٱلۡأَحۡزَابِ
இன்னும், நம்பிக்கை கொண்டவர் கூறினார்: “என் மக்களே! நிச்சயமாக நான் உங்கள் மீது (நபிமார்களுக்கு எதிராக ஒன்றுகூடிய) குழுக்களுடைய (தண்டனை) நாளை போன்றதை (-அது போன்ற ஒரு தண்டனை உடைய நாள் வருவதை)ப் பயப்படுகிறேன்.”
வசனம் : 31
مِثۡلَ دَأۡبِ قَوۡمِ نُوحٖ وَعَادٖ وَثَمُودَ وَٱلَّذِينَ مِنۢ بَعۡدِهِمۡۚ وَمَا ٱللَّهُ يُرِيدُ ظُلۡمٗا لِّلۡعِبَادِ
நூஹுடைய மக்கள், ஆது, ஸமூது, இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுடைய வழமையைப் போன்றுதான் (உங்கள் வழமையும் இருக்கிறது. ஆகவே, அவர்களுக்கு வந்த தண்டனை உங்களுக்கும் வரும்). அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயத்தை நாடுகிறவனாக இல்லை.
வசனம் : 32
وَيَٰقَوۡمِ إِنِّيٓ أَخَافُ عَلَيۡكُمۡ يَوۡمَ ٱلتَّنَادِ
“இன்னும், என் மக்களே! நிச்சயமாக நான் உங்கள் மீது (மக்கள் ஒருவரை ஒருவர்) கூவி அழைக்கின்ற (மறுமை) நாளைப் பயப்படுகிறேன்.”
வசனம் : 33
يَوۡمَ تُوَلُّونَ مُدۡبِرِينَ مَا لَكُم مِّنَ ٱللَّهِ مِنۡ عَاصِمٖۗ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنۡ هَادٖ
அந்நாளில் நீங்கள் புறமுதுகிட்டவர்களாக திரும்பி ஓடுவீர்கள். அல்லாஹ்விடமிருந்து (உங்களை) பாதுகாப்பவர் எவரும் இருக்க மாட்டார். யாரை அல்லாஹ் வழிகெடுத்தானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாரும் இல்லை.

வசனம் : 34
وَلَقَدۡ جَآءَكُمۡ يُوسُفُ مِن قَبۡلُ بِٱلۡبَيِّنَٰتِ فَمَا زِلۡتُمۡ فِي شَكّٖ مِّمَّا جَآءَكُم بِهِۦۖ حَتَّىٰٓ إِذَا هَلَكَ قُلۡتُمۡ لَن يَبۡعَثَ ٱللَّهُ مِنۢ بَعۡدِهِۦ رَسُولٗاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَنۡ هُوَ مُسۡرِفٞ مُّرۡتَابٌ
திட்டவட்டமாக இதற்கு முன்னர் உங்களிடம் (பல) தெளிவான அத்தாட்சிகளுடன் யூஸுஃப் வந்தார். ஆக, அவர் உங்களிடம் எதைக் கொண்டுவந்தாரோ அதில் நீங்கள் சந்தேகத்தில்தான் தொடர்ந்து இருந்தீர்கள். இறுதியாக, அவர் இறந்துவிட்டபோது அவருக்கு பின்னர் ஒரு தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான் என்று கூறினீர்கள். இவ்வாறுதான், எவர் எல்லை மீறி பாவம் செய்பவராகவும் சந்தேகம் கொள்பவராகவும் இருப்பாரோ அவரை அல்லாஹ் வழிகெடுப்பான்.
வசனம் : 35
ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِيٓ ءَايَٰتِ ٱللَّهِ بِغَيۡرِ سُلۡطَٰنٍ أَتَىٰهُمۡۖ كَبُرَ مَقۡتًا عِندَ ٱللَّهِ وَعِندَ ٱلَّذِينَ ءَامَنُواْۚ كَذَٰلِكَ يَطۡبَعُ ٱللَّهُ عَلَىٰ كُلِّ قَلۡبِ مُتَكَبِّرٖ جَبَّارٖ
இவர்கள் தங்களுக்கு வந்த ஆதாரமின்றி அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் தர்க்கம் செய்கிறார்கள். அல்லாஹ்விடமும் நம்பிக்கையாளர்களிடமும் (இவர்களது செயல்) மிகப் பெரிய கோபத்திற்குரியது. இவ்வாறுதான் பெருமை அடிப்பவர்கள், அநியாயக்காரர்கள் எல்லோருடைய உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரை இடுகிறான்.
வசனம் : 36
وَقَالَ فِرۡعَوۡنُ يَٰهَٰمَٰنُ ٱبۡنِ لِي صَرۡحٗا لَّعَلِّيٓ أَبۡلُغُ ٱلۡأَسۡبَٰبَ
ஃபிர்அவ்ன் கூறினான்: “ஹாமானே! எனக்காக ஒரு (பெரிய, உயரமான) கோபுரத்தைக் கட்டு. நான் அந்த வாசல்களுக்கு சென்றடைய வேண்டும்.”
வசனம் : 37
أَسۡبَٰبَ ٱلسَّمَٰوَٰتِ فَأَطَّلِعَ إِلَىٰٓ إِلَٰهِ مُوسَىٰ وَإِنِّي لَأَظُنُّهُۥ كَٰذِبٗاۚ وَكَذَٰلِكَ زُيِّنَ لِفِرۡعَوۡنَ سُوٓءُ عَمَلِهِۦ وَصُدَّ عَنِ ٱلسَّبِيلِۚ وَمَا كَيۡدُ فِرۡعَوۡنَ إِلَّا فِي تَبَابٖ
“(அதாவது,) வானங்களின் வாசல்களுக்கு (நான் சென்றடைய வேண்டும்). அப்படி ஏறிவிட்டால் நான் மூஸாவின் கடவுளை எட்டிப்பார்த்துவிடுவேன். இன்னும், நிச்சயமாக நான் அவரை பொய்யராகவே கருதுகிறேன்.” இவ்வாறுதான், ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அலங்காரமாக்கப்பட்டது. இன்னும், அவன் நேரான பாதையை விட்டு தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தவிர இல்லை.
வசனம் : 38
وَقَالَ ٱلَّذِيٓ ءَامَنَ يَٰقَوۡمِ ٱتَّبِعُونِ أَهۡدِكُمۡ سَبِيلَ ٱلرَّشَادِ
இன்னும், நம்பிக்கை கொண்டவர் கூறினார்: “என் மக்களே! என்னை பின்பற்றுங்கள்! நான் உங்களுக்கு நேரான பாதையை வழிகாட்டுகிறேன்.”
வசனம் : 39
يَٰقَوۡمِ إِنَّمَا هَٰذِهِ ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَا مَتَٰعٞ وَإِنَّ ٱلۡأٓخِرَةَ هِيَ دَارُ ٱلۡقَرَارِ
“என் மக்களே! இந்த உலக வாழ்க்கை எல்லாம் அற்ப இன்பம்தான். நிச்சயமாக மறுமைதான் நிரந்தரமான இல்லமாகும்.”
வசனம் : 40
مَنۡ عَمِلَ سَيِّئَةٗ فَلَا يُجۡزَىٰٓ إِلَّا مِثۡلَهَاۖ وَمَنۡ عَمِلَ صَٰلِحٗا مِّن ذَكَرٍ أَوۡ أُنثَىٰ وَهُوَ مُؤۡمِنٞ فَأُوْلَٰٓئِكَ يَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ يُرۡزَقُونَ فِيهَا بِغَيۡرِ حِسَابٖ
“யார் ஒரு தீமையை செய்வாரோ அவர் அது போன்றதே தவிர கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்கள் அல்லது பெண்களில் யார் ஒருவர் அவர் நம்பிக்கையாளராக இருக்கின்ற நிலையில் நன்மையை செய்வாரோ அவர்கள் சொர்க்கத்தில் பிரவேசிப்பார்கள். அதில் அவர்கள் கணக்கின்றி (உணவு, குடிபானம், இன்னும் பலவிதமான) அருட்கொடைகள் வழங்கப்படுவார்கள்.”

வசனம் : 41
۞ وَيَٰقَوۡمِ مَا لِيٓ أَدۡعُوكُمۡ إِلَى ٱلنَّجَوٰةِ وَتَدۡعُونَنِيٓ إِلَى ٱلنَّارِ
“என் மக்களே! எனக்கு என்ன நேர்ந்தது (நீங்கள் நரகத்தை விட்டு) பாதுகாப்பு பெறுவதற்கு நான் உங்களை அழைக்கிறேன். நீங்களோ என்னை நரகத்தின் பக்கம் அழைக்கிறீர்கள்.”
வசனம் : 42
تَدۡعُونَنِي لِأَكۡفُرَ بِٱللَّهِ وَأُشۡرِكَ بِهِۦ مَا لَيۡسَ لِي بِهِۦ عِلۡمٞ وَأَنَا۠ أَدۡعُوكُمۡ إِلَى ٱلۡعَزِيزِ ٱلۡغَفَّٰرِ
“நான் அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும் எனக்கு அறிவில்லாத ஒன்றை அவனுக்கு நான் இணைவைப்பதற்கும் நீங்கள் என்னை அழைக்கிறீர்கள். நானோ உங்களை மிகைத்தவனின் பக்கம், மகா மன்னிப்பாளனின் பக்கம் அழைக்கிறேன்.”
வசனம் : 43
لَا جَرَمَ أَنَّمَا تَدۡعُونَنِيٓ إِلَيۡهِ لَيۡسَ لَهُۥ دَعۡوَةٞ فِي ٱلدُّنۡيَا وَلَا فِي ٱلۡأٓخِرَةِ وَأَنَّ مَرَدَّنَآ إِلَى ٱللَّهِ وَأَنَّ ٱلۡمُسۡرِفِينَ هُمۡ أَصۡحَٰبُ ٱلنَّارِ
“கண்டிப்பாக, நீங்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அதற்கு இவ்வுலகத்திலும் மறுமையிலும் (அங்கீகரிக்கப்பட்ட) பிரார்த்தனை ஏதும் இல்லை. (-நீங்கள் கேட்கிற எந்த பிரார்த்தனையும் அது செவியுறாது, செவியுறவும் முடியாது.) நிச்சயமாக நாம் திருப்பப்படுவது அல்லாஹ்வின் பக்கம்தான், நிச்சயமாக எல்லை மீறி பாவம் செய்பவர்கள்தான் நரகவாசிகள்.”
வசனம் : 44
فَسَتَذۡكُرُونَ مَآ أَقُولُ لَكُمۡۚ وَأُفَوِّضُ أَمۡرِيٓ إِلَى ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ بَصِيرُۢ بِٱلۡعِبَادِ
“ஆக, நான் உங்களுக்கு கூறுவதை நீங்கள் விரைவில் நினைவு கூர்வீர்கள். என் காரியத்தை நான் அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன். நிச்சயமாக அல்லாஹ் அடியார்களை உற்று நோக்குபவன் ஆவான்.”
வசனம் : 45
فَوَقَىٰهُ ٱللَّهُ سَيِّـَٔاتِ مَا مَكَرُواْۖ وَحَاقَ بِـَٔالِ فِرۡعَوۡنَ سُوٓءُ ٱلۡعَذَابِ
ஆக, அவர்கள் செய்த சூழ்ச்சிகளின் தீங்குகளை விட்டு அல்லாஹ் அவரை பாதுகாத்தான். இன்னும், ஃபிர்அவ்னின் குடும்பத்தார்களை கடுமையான தண்டனை சூழ்ந்துகொண்டது.
வசனம் : 46
ٱلنَّارُ يُعۡرَضُونَ عَلَيۡهَا غُدُوّٗا وَعَشِيّٗاۚ وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ أَدۡخِلُوٓاْ ءَالَ فِرۡعَوۡنَ أَشَدَّ ٱلۡعَذَابِ
நரகம், அதில் காலையிலும் மாலையிலும் அவர்கள் கொண்டுவரப்படுவார்கள். (இது அவர்களுக்கு மண்ணறையில் நடக்கும் தண்டனையாகும்.) இன்னும், மறுமை நிகழ்கின்ற நாளிலோ, “ஃபிர்அவ்னின் குடும்பத்தார்களை கடுமையான தண்டனையில் புகுத்துங்கள்!” (என்று சொல்லப்படும்).
வசனம் : 47
وَإِذۡ يَتَحَآجُّونَ فِي ٱلنَّارِ فَيَقُولُ ٱلضُّعَفَٰٓؤُاْ لِلَّذِينَ ٱسۡتَكۡبَرُوٓاْ إِنَّا كُنَّا لَكُمۡ تَبَعٗا فَهَلۡ أَنتُم مُّغۡنُونَ عَنَّا نَصِيبٗا مِّنَ ٱلنَّارِ
இன்னும், அவர்கள் நரகத்தில் ஒருவருக்கொருவர் வாய்ச் சண்டை செய்யும்போது, (வழிகெட்ட) பலவீனர்கள் பெருமை அடித்த (தங்கள் தலை)வர்களை நோக்கி கூறுவார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம். ஆகவே, நரகத்திலிருந்து ஒரு பகுதி (சிறிது தண்டனை)யை நீங்கள் எங்களை விட்டு தடுப்பீர்களா?”
வசனம் : 48
قَالَ ٱلَّذِينَ ٱسۡتَكۡبَرُوٓاْ إِنَّا كُلّٞ فِيهَآ إِنَّ ٱللَّهَ قَدۡ حَكَمَ بَيۡنَ ٱلۡعِبَادِ
பெருமை அடித்த (தலை)வர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக நாம் எல்லோரும் அதில்தான் தங்கி இருப்போம். நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு மத்தியில் (இறுதி) தீர்ப்பளித்துவிட்டான்.”
வசனம் : 49
وَقَالَ ٱلَّذِينَ فِي ٱلنَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ٱدۡعُواْ رَبَّكُمۡ يُخَفِّفۡ عَنَّا يَوۡمٗا مِّنَ ٱلۡعَذَابِ
நரகத்தில் உள்ளவர்கள் நரகத்தின் காவலாளிகளுக்குக் கூறுவார்கள்: “உங்கள் இறைவனை அழையுங்கள்! அவன் எங்களை விட்டும் ஒரு நாளாவது தண்டனையை இலகுவாக்குவான்.”

வசனம் : 50
قَالُوٓاْ أَوَلَمۡ تَكُ تَأۡتِيكُمۡ رُسُلُكُم بِٱلۡبَيِّنَٰتِۖ قَالُواْ بَلَىٰۚ قَالُواْ فَٱدۡعُواْۗ وَمَا دُعَٰٓؤُاْ ٱلۡكَٰفِرِينَ إِلَّا فِي ضَلَٰلٍ
(அந்த காவலாளிகள்) கூறுவார்கள்: “தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் உங்கள் தூதர்கள் வந்திருக்கவில்லையா?” அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “ஏன் இல்லை! (கண்டிப்பாக வந்தார்கள்.)” அவர்கள் கூறுவார்கள்: “(உங்கள் அனைவருக்காகவும்) நீங்கள் பிரார்த்தனை கேளுங்கள்!” காஃபிர்கள் – நிராகரிப்பாளர்களின் பிரார்த்தனை (எந்த பலனுமளிக்காது. ஏனெனில், அவர்களின் பிரார்த்தனை) வீணான வழிகேட்டில்தான் இருக்கிறது.
வசனம் : 51
إِنَّا لَنَنصُرُ رُسُلَنَا وَٱلَّذِينَ ءَامَنُواْ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَيَوۡمَ يَقُومُ ٱلۡأَشۡهَٰدُ
நிச்சயமாக நாம் நமது தூதர்களுக்கும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் சாட்சிகள் (சாட்சி சொல்ல) நிற்கின்ற (மறுமை) நாளிலும் உதவுவோம்.
வசனம் : 52
يَوۡمَ لَا يَنفَعُ ٱلظَّٰلِمِينَ مَعۡذِرَتُهُمۡۖ وَلَهُمُ ٱللَّعۡنَةُ وَلَهُمۡ سُوٓءُ ٱلدَّارِ
அந்நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்கள் வருத்தங்கள் தெரிவிப்பது பலனளிக்காது. அவர்களுக்கு சாபம்தான் உண்டாகும். இன்னும், அவர்களுக்கு (தங்குமிடம் தண்டனைகள் நிறைந்த நரகமாகிய) கெட்ட இல்லமாகும்.
வசனம் : 53
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَى ٱلۡهُدَىٰ وَأَوۡرَثۡنَا بَنِيٓ إِسۡرَٰٓءِيلَ ٱلۡكِتَٰبَ
திட்டவட்டமாக நாம் மூஸாவிற்கு நேர்வழியைக் கொடுத்தோம். இன்னும், இஸ்ராயீலின் சந்ததிகளை அந்த வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கினோம்.
வசனம் : 54
هُدٗى وَذِكۡرَىٰ لِأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ
(அந்த வேதம்) நேர்வழிகாட்டியும் நிறைவான அறிவுடையவர்களுக்கு நல்லுபதேசமும் ஆகும்.
வசனம் : 55
فَٱصۡبِرۡ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَٱسۡتَغۡفِرۡ لِذَنۢبِكَ وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ بِٱلۡعَشِيِّ وَٱلۡإِبۡكَٰرِ
ஆக, (சகிப்புடன் மன உறுதியுடன்) பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே! இன்னும், உமது பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்பீராக! இன்னும், மாலையிலும் காலையிலும் உமது இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக!
வசனம் : 56
إِنَّ ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِيٓ ءَايَٰتِ ٱللَّهِ بِغَيۡرِ سُلۡطَٰنٍ أَتَىٰهُمۡ إِن فِي صُدُورِهِمۡ إِلَّا كِبۡرٞ مَّا هُم بِبَٰلِغِيهِۚ فَٱسۡتَعِذۡ بِٱللَّهِۖ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ
நிச்சயமாக எவர்கள் தங்களிடம் எவ்வித ஆதாரமும் வராமல் இருக்க அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் தர்க்கம் செய்கிறார்களோ, அவர்களின் உள்ளங்களில் பெருமையைத் தவிர இல்லை. அவர்கள் அந்த பெருமையை அடையவும் முடியாது. ஆகவே, அல்லாஹ்விடம் நீர் பாதுகாப்புத் தேடுவீராக! நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன்.
வசனம் : 57
لَخَلۡقُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ أَكۡبَرُ مِنۡ خَلۡقِ ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ
மனிதர்களை படைப்பதைவிட வானங்களையும் பூமியையும் படைப்பதுதான் மிகப் பெரியது. என்றாலும், மனிதர்களில் அதிகமானவர்கள் (எல்லா படைப்புகளையும் படைத்த இறைவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்பதை) அறியமாட்டார்கள்.
வசனம் : 58
وَمَا يَسۡتَوِي ٱلۡأَعۡمَىٰ وَٱلۡبَصِيرُ وَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَلَا ٱلۡمُسِيٓءُۚ قَلِيلٗا مَّا تَتَذَكَّرُونَ
குருடரும் பார்வையுள்ளவரும் சமமாக மாட்டார்கள். நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களும் கெட்டவர்களும் சமமாக மாட்டார்கள். நீங்கள் மிகக் குறைவாகத்தான் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.

வசனம் : 59
إِنَّ ٱلسَّاعَةَ لَأٓتِيَةٞ لَّا رَيۡبَ فِيهَا وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يُؤۡمِنُونَ
நிச்சயமாக மறுமை வந்தே தீரும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. என்றாலும் மனிதர்களில் அதிகமானவர்கள் (அதை) நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
வசனம் : 60
وَقَالَ رَبُّكُمُ ٱدۡعُونِيٓ أَسۡتَجِبۡ لَكُمۡۚ إِنَّ ٱلَّذِينَ يَسۡتَكۡبِرُونَ عَنۡ عِبَادَتِي سَيَدۡخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ
இன்னும், உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னிடம் பிரார்த்தியுங்கள்! நான் உங்களுக்கு (உங்கள் பிரார்த்தனையை) அங்கீகரிப்பேன். நிச்சயமாக எனது வணக்க வழிபாடுகளை விட்டு பெருமை அடிப்பவர்கள் சிறுமைப்பட்டவர்களாக விரைவில் நரகத்தில் நுழைவார்கள்.”
வசனம் : 61
ٱللَّهُ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلَّيۡلَ لِتَسۡكُنُواْ فِيهِ وَٱلنَّهَارَ مُبۡصِرًاۚ إِنَّ ٱللَّهَ لَذُو فَضۡلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَشۡكُرُونَ
அல்லாஹ்தான் உங்களுக்கு இரவை - அதில் நீங்கள் ஓய்வு எடுப்பதற்காகவும்; - இன்னும், பகலை வெளிச்சமுள்ளதாகவும் ஆக்கினான். நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது அருளுடையவன் ஆவான். என்றாலும், மனிதர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்த மாட்டார்கள்.
வசனம் : 62
ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡ خَٰلِقُ كُلِّ شَيۡءٖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَۖ فَأَنَّىٰ تُؤۡفَكُونَ
(இவற்றை எல்லாம் செய்த) அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன், எல்லாவற்றையும் படைத்தவன். அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆக, நீங்கள் எவ்வாறு (அவனை வணங்குவதிலிருந்து) திருப்பப்படுகிறீர்கள்.
வசனம் : 63
كَذَٰلِكَ يُؤۡفَكُ ٱلَّذِينَ كَانُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ يَجۡحَدُونَ
இவ்வாறுதான் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை மறுத்துக் கொண்டிருந்தவர்கள் (அல்லாஹ்வை வணங்குவதை விட்டு) திருப்பப்படுகிறார்கள்.
வசனம் : 64
ٱللَّهُ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَرۡضَ قَرَارٗا وَٱلسَّمَآءَ بِنَآءٗ وَصَوَّرَكُمۡ فَأَحۡسَنَ صُوَرَكُمۡ وَرَزَقَكُم مِّنَ ٱلطَّيِّبَٰتِۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡۖ فَتَبَارَكَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ
அல்லாஹ்தான் உங்களுக்கு பூமியை (நீங்கள்) வசிப்பதற்கு வசதியாகவும் வானத்தை ஒரு கட்டிடமாகவும் அமைத்தான். இன்னும், அவன்தான் உங்களை உருவமைத்தான். ஆக, (மனிதர்களாகிய) உங்கள் உருவங்களை (ஏனைய படைப்புகளை பார்க்கிலும்) அழகாக்கினான். இன்னும், நல்ல உணவுகளில் இருந்து உங்களுக்கு உணவளித்தான். (இவற்றை எல்லாம் செய்த) அந்த அல்லாஹ்தான் (நீங்கள் வணங்கவேண்டிய) உங்கள் இறைவன் ஆவான். ஆக, அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன் ஆவான்.
வசனம் : 65
هُوَ ٱلۡحَيُّ لَآ إِلَٰهَ إِلَّا هُوَ فَٱدۡعُوهُ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَۗ ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
அவன்தான் என்றும் உயிரோடு இருப்பவன். (வணங்கத்தகுதியான) இறைவன் அவனைத் தவிர அறவே இல்லை. ஆகவே, மார்க்கத்தை (-வழிபாடுகளை) அவனுக்கு தூய்மைப்படுத்தியவர்களாக அவனிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்! அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரியது.
வசனம் : 66
۞ قُلۡ إِنِّي نُهِيتُ أَنۡ أَعۡبُدَ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ لَمَّا جَآءَنِيَ ٱلۡبَيِّنَٰتُ مِن رَّبِّي وَأُمِرۡتُ أَنۡ أُسۡلِمَ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ
(நபியே) நீர் கூறுவீராக! “என் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் வந்துவிட்டபோது, அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைப்பவர்களை நான் வணங்குவதற்கு நிச்சயமாக நான் தடுக்கப்பட்டு விட்டேன். இன்னும், அகிலங்களின் இறைவனுக்கு நான் முற்றிலும் பணிந்து நடக்கவேண்டும் என்று நான் கட்டளை இடப்பட்டுள்ளேன்.”

வசனம் : 67
هُوَ ٱلَّذِي خَلَقَكُم مِّن تُرَابٖ ثُمَّ مِن نُّطۡفَةٖ ثُمَّ مِنۡ عَلَقَةٖ ثُمَّ يُخۡرِجُكُمۡ طِفۡلٗا ثُمَّ لِتَبۡلُغُوٓاْ أَشُدَّكُمۡ ثُمَّ لِتَكُونُواْ شُيُوخٗاۚ وَمِنكُم مَّن يُتَوَفَّىٰ مِن قَبۡلُۖ وَلِتَبۡلُغُوٓاْ أَجَلٗا مُّسَمّٗى وَلَعَلَّكُمۡ تَعۡقِلُونَ
அவன்தான் உங்களை (முதன் முதலில்) மண்ணிலிருந்தும்; பிறகு, இந்திரியத்திலிருந்தும்; பிறகு, இரத்தக் கட்டியிலிருந்தும் படைத்தான். பிறகு, அவன் உங்களை குழந்தைகளாக வெளிக்கொண்டு வருகிறான். பிறகு, நீங்கள் உங்கள் (வாலிபத்தின்) வலிமையை அடைவதற்காகவும்; பிறகு, நீங்கள் வயோதிகர்களாக ஆகுவதற்காகவும் (அவன் உங்களுக்கு ஆயுள் காலத்தை நீட்டுகிறான்). இதற்கு முன்னர் உங்களில் உயிர் கைப்பற்றப்படுபவரும் உண்டு. இன்னும், ஒரு குறிப்பிட்ட தவணையை நீங்கள் அடைவதற்காகவும் நீங்கள் சிந்தித்து புரிவதற்காகவும் (அவன் உங்களை இவ்வாறு படைத்தது மட்டுமல்லாமல், தான் படைத்த விதத்தையும் உங்களுக்கு விவரிக்கிறான்).
வசனம் : 68
هُوَ ٱلَّذِي يُحۡيِۦ وَيُمِيتُۖ فَإِذَا قَضَىٰٓ أَمۡرٗا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ
அவன்தான் உயிர்ப்பிக்கிறான், மரணிக்கச் செய்கிறான். ஆக, அவன் ஒரு காரியத்தை முடிவு செய்துவிட்டால் அவன் அதற்கு கூறுவதெல்லாம், “ஆகு” என்றுதான். உடனே அது ஆகிவிடும்.
வசனம் : 69
أَلَمۡ تَرَ إِلَى ٱلَّذِينَ يُجَٰدِلُونَ فِيٓ ءَايَٰتِ ٱللَّهِ أَنَّىٰ يُصۡرَفُونَ
(நபியே!) அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்பவர்களை - அவர்கள் எவ்வாறு (சத்தியத்தில் இருந்து) திருப்பப்படுகிறார்கள் என்று - நீர் பார்க்கவில்லையா?
வசனம் : 70
ٱلَّذِينَ كَذَّبُواْ بِٱلۡكِتَٰبِ وَبِمَآ أَرۡسَلۡنَا بِهِۦ رُسُلَنَاۖ فَسَوۡفَ يَعۡلَمُونَ
எவர்கள் வேதத்தையும் நமது தூதர்களை நாம் எதைக் கொண்டு அனுப்பினோமோ அதையும் பொய்ப்பித்தார்களோ அவர்கள் விரைவில் (அல்லாஹ்வின் தண்டனையை) அறிந்து கொள்வார்கள்.
வசனம் : 71
إِذِ ٱلۡأَغۡلَٰلُ فِيٓ أَعۡنَٰقِهِمۡ وَٱلسَّلَٰسِلُ يُسۡحَبُونَ
அப்போது, இரும்பு வளையங்களும் சங்கிலிகளும் அவர்களின் (கைகள், கால்கள் இன்னும்) கழுத்துகளில் போடப்பட்டு (நரகத்தை நோக்கி) இழுக்கப்படுவார்கள்.
வசனம் : 72
فِي ٱلۡحَمِيمِ ثُمَّ فِي ٱلنَّارِ يُسۡجَرُونَ
கொதிக்கின்ற நீரில் (அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்). பிறகு நரக நெருப்பில் அவர்கள் எரிக்கப்படுவார்கள்.
வசனம் : 73
ثُمَّ قِيلَ لَهُمۡ أَيۡنَ مَا كُنتُمۡ تُشۡرِكُونَ
பிறகு, நீங்கள் இணைவைத்து வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே? என்று அவர்களிடம் கூறப்படும்.
வசனம் : 74
مِن دُونِ ٱللَّهِۖ قَالُواْ ضَلُّواْ عَنَّا بَل لَّمۡ نَكُن نَّدۡعُواْ مِن قَبۡلُ شَيۡـٔٗاۚ كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ ٱلۡكَٰفِرِينَ
அல்லாஹ்வை அன்றி (நீங்கள் அவர்களை வணங்கினீர்களே!) அவர்கள் கூறுவார்கள்: “அவை எங்களை விட்டும் தவறிவிட்டன. மாறாக, இதற்கு முன்னர் நாங்கள் எதையும் வணங்குபவர்களாக இருக்கவில்லையே!” (என்றும் பொய் கூறுவார்கள்). இவ்வாறுதான், அல்லாஹ் நிராகரிப்பாளர்களை வழிகெடுக்கிறான்.
வசனம் : 75
ذَٰلِكُم بِمَا كُنتُمۡ تَفۡرَحُونَ فِي ٱلۡأَرۡضِ بِغَيۡرِ ٱلۡحَقِّ وَبِمَا كُنتُمۡ تَمۡرَحُونَ
இது (-அல்லாஹ் உங்களை தண்டிப்பது ஏனெனில்), பூமியில் அநியாயத்தை (பாவங்களை)க் கொண்டு நீங்கள் (அளவு கடந்து) மகிழ்ச்சி அடைபவர்களாக இருந்த காரணத்தாலும்; மமதையும் ஆணவமும் கொள்பவர்களாக நீங்கள் இருந்த காரணத்தாலும் ஆகும்.
வசனம் : 76
ٱدۡخُلُوٓاْ أَبۡوَٰبَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَاۖ فَبِئۡسَ مَثۡوَى ٱلۡمُتَكَبِّرِينَ
நரகத்தின் வாசல்களில் நீங்கள் நுழையுங்கள்! அதில் நிரந்தரமானவர்களாக தங்கிவிடுங்கள். ஆக, பெருமை அடிப்பவர்களின் தங்குமிடம் மிகக் கெட்டது.
வசனம் : 77
فَٱصۡبِرۡ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞۚ فَإِمَّا نُرِيَنَّكَ بَعۡضَ ٱلَّذِي نَعِدُهُمۡ أَوۡ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيۡنَا يُرۡجَعُونَ
ஆகவே, (நபியே! சகிப்புடன் மன உறுதியுடன்) பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே! ஆக, ஒன்று, அவர்களை நாம் எச்சரித்தவற்றில் சிலவற்றை உமக்கு காண்பிப்போம். அல்லது, (அதற்கு முன்னர்) உம்மை உயிர் கைப்பற்றுவோம். ஆக, (பின்னர்) நம் பக்கம்தான் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள். (அப்போது அவர்களை தண்டிப்போம்.)

வசனம் : 78
وَلَقَدۡ أَرۡسَلۡنَا رُسُلٗا مِّن قَبۡلِكَ مِنۡهُم مَّن قَصَصۡنَا عَلَيۡكَ وَمِنۡهُم مَّن لَّمۡ نَقۡصُصۡ عَلَيۡكَۗ وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأۡتِيَ بِـَٔايَةٍ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ فَإِذَا جَآءَ أَمۡرُ ٱللَّهِ قُضِيَ بِٱلۡحَقِّ وَخَسِرَ هُنَالِكَ ٱلۡمُبۡطِلُونَ
திட்டவட்டமாக உமக்கு முன்னர் பல தூதர்களை நாம் அனுப்பினோம். அவர்களில் சிலரை(ப் பற்றிய வரலாறுகளை) நாம் உமக்கு விவரித்தோம். இன்னும், அவர்களில் சிலரை(ப் பற்றிய வரலாறுகளை) நாம் உமக்கு விவரிக்கவில்லை. அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர ஓர் அத்தாட்சியைக் கொண்டுவருவது எந்த ஒரு தூதருக்கும் சாத்தியமானது அல்ல. ஆக, அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டால் நீதமாக தீர்ப்பளிக்கப்படும். அப்போது பொய்யர்கள் நஷ்டமடைவார்கள்.
வசனம் : 79
ٱللَّهُ ٱلَّذِي جَعَلَ لَكُمُ ٱلۡأَنۡعَٰمَ لِتَرۡكَبُواْ مِنۡهَا وَمِنۡهَا تَأۡكُلُونَ
அல்லாஹ்தான் உங்களுக்காக கால்நடைகளை, - அவற்றில் (சிலவற்றின் மீது) நீங்கள் வாகனிப்பதற்காக - படைத்தான். இன்னும், அவற்றில் (சிலவற்றின் மாமிசங்களை) நீங்கள் புசிக்கிறீர்கள்.
வசனம் : 80
وَلَكُمۡ فِيهَا مَنَٰفِعُ وَلِتَبۡلُغُواْ عَلَيۡهَا حَاجَةٗ فِي صُدُورِكُمۡ وَعَلَيۡهَا وَعَلَى ٱلۡفُلۡكِ تُحۡمَلُونَ
இன்னும், உங்களுக்கு அவற்றில் பல பலன்கள் உள்ளன. இன்னும், உங்கள் நெஞ்சங்களில் உள்ள ஓர் ஆசையை அதன் மூலம் நீங்கள் அடைவதற்காகவும் (அவன் உங்களுக்கு இந்த கால்நடைகளைப் படைத்தான்). இன்னும், அவற்றின் மீதும் கப்பலின் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள். (-நீங்கள் அவற்றில் பயணம் செய்கிறீர்கள்.)
வசனம் : 81
وَيُرِيكُمۡ ءَايَٰتِهِۦ فَأَيَّ ءَايَٰتِ ٱللَّهِ تُنكِرُونَ
இன்னும், அவன் உங்களுக்கு தனது அத்தாட்சிகளைக் காண்பிக்கிறான். ஆக, அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் எதை நீங்கள் மறுப்பீர்கள்?.
வசனம் : 82
أَفَلَمۡ يَسِيرُواْ فِي ٱلۡأَرۡضِ فَيَنظُرُواْ كَيۡفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ كَانُوٓاْ أَكۡثَرَ مِنۡهُمۡ وَأَشَدَّ قُوَّةٗ وَءَاثَارٗا فِي ٱلۡأَرۡضِ فَمَآ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُواْ يَكۡسِبُونَ
ஆக, இவர்கள் பூமியில் சுற்றுப் பயணம் செய்யவில்லையா? (அப்படி செய்திருந்தால்) தங்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று இவர்கள் பார்த்திருப்பார்களே! அவர்கள் இவர்களை விட அதிகமாகவும், வலிமையால் மிக பலசாலிகளாகவும், பூமியில் அடையாளங்களால் (தொழிற்சாலைகள் இன்னும் மாட மாளிகைகளால்) அதிகமாகவும் இருந்தனர். ஆனால், அவர்கள் செய்து கொண்டிருந்தது (-அவர்களின் பலமான கோட்டைகள்) அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையை) தடுக்கவில்லை.
வசனம் : 83
فَلَمَّا جَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ فَرِحُواْ بِمَا عِندَهُم مِّنَ ٱلۡعِلۡمِ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ
ஆக, அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்கள் தங்களிடம் இருந்த கல்வித் திறமைகளைக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் எதை கேலி செய்பவர்களாக இருந்தார்களோ அ(ல்லாஹ்வின் தண்டனையான)து அவர்களை சூழ்ந்துவிட்டது.
வசனம் : 84
فَلَمَّا رَأَوۡاْ بَأۡسَنَا قَالُوٓاْ ءَامَنَّا بِٱللَّهِ وَحۡدَهُۥ وَكَفَرۡنَا بِمَا كُنَّا بِهِۦ مُشۡرِكِينَ
ஆக, அவர்கள் நமது தண்டனை (இறங்கிய சமயத்தில் நமது வலிமை)யைப் பார்த்தபோது “நாங்கள் அல்லாஹ்வை - அவன் ஒருவனை மட்டும் - நம்பிக்கை கொண்டோம்; இன்னும், நாங்கள் எதை (அல்லாஹ்விற்கு) இணைவைப்பவர்களாக இருந்தோமோ அதை நிராகரித்து விட்டோம்” என்று கூறினார்கள்.
வசனம் : 85
فَلَمۡ يَكُ يَنفَعُهُمۡ إِيمَٰنُهُمۡ لَمَّا رَأَوۡاْ بَأۡسَنَاۖ سُنَّتَ ٱللَّهِ ٱلَّتِي قَدۡ خَلَتۡ فِي عِبَادِهِۦۖ وَخَسِرَ هُنَالِكَ ٱلۡكَٰفِرُونَ
ஆக, அவர்கள் நமது தண்டனையைப் பார்த்தபோது அவர்கள் நம்பிக்கை கொண்டது அவர்களுக்கு பலன் தரக்கூடியதாக இருக்கவில்லை. அவனது அடியார்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் நடைமுறை எது (முன்னர்) சென்றதோ அதே நடைமுறைதான் (இவர்களுடனும் பின்பற்றப்படும்). அப்போது நிராகரிப்பாளர்கள் நிச்சயம் நஷ்டமடைவார்கள்.
வெற்றிகரமாக அனுப்பப்பட்டது