அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு

Tamil Translation - Omar Sharif

Scan the qr code to link to this page

سورة الأنبياء - ஸூரா அன்பியாஃ

பக்க எண்

வசனம்

வசனத்தின் உரை நடையை காண்பிக்கவும்
அடிக்குறிப்பைக் காண்பிக்கவும்

வசனம் : 1
ٱقۡتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمۡ وَهُمۡ فِي غَفۡلَةٖ مُّعۡرِضُونَ
மக்களுக்கு அவர்களின் விசாரணை (நாள்) நெருங்கி வருகிறது. அவர்களோ மறதியில் இருக்கிறார்கள், (நமது எச்சரிக்கையை) புறக்கணிக்கிறார்கள்.
வசனம் : 2
مَا يَأۡتِيهِم مِّن ذِكۡرٖ مِّن رَّبِّهِم مُّحۡدَثٍ إِلَّا ٱسۡتَمَعُوهُ وَهُمۡ يَلۡعَبُونَ
அவர்களுடைய இறைவனிடமிருந்து புதிய அறிவுரை ஏதும் அவர்களுக்கு வந்தால் அவர்களோ விளையாடியவர்களாக இருக்கும் நிலையில் அதை செவியுறுகிறார்கள்.
வசனம் : 3
لَاهِيَةٗ قُلُوبُهُمۡۗ وَأَسَرُّواْ ٱلنَّجۡوَى ٱلَّذِينَ ظَلَمُواْ هَلۡ هَٰذَآ إِلَّا بَشَرٞ مِّثۡلُكُمۡۖ أَفَتَأۡتُونَ ٱلسِّحۡرَ وَأَنتُمۡ تُبۡصِرُونَ
அவர்களது உள்ளங்கள் மறதியில் இருக்கின்றன. (இணைவைக்கின்ற) அநியாயக்காரர்கள் (நமது நபியை குறித்து அவர்கள் என்ன சொல்ல வேண்டுமென்று தங்களுக்கு மத்தியில் ஒருமித்து முடிவு செய்த) பேச்சை (வெளியில்) பகிரங்கப்படுத்தி பேசினார்கள். (அதாவது, நபியவர்களை சுட்டிக்காண்பித்து) “இவர் உங்களைப் போன்ற மனிதரே தவிர வேறில்லை. (மக்களே!) நீங்கள் (இதை) அறிந்துகொண்டே (அவர் ஓதுகிற) சூனியத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?” (என்று வெளிப்படையாக கேட்டனர்.)
வசனம் : 4
قَالَ رَبِّي يَعۡلَمُ ٱلۡقَوۡلَ فِي ٱلسَّمَآءِ وَٱلۡأَرۡضِۖ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ
(நபி) கூறினார்: என் இறைவன் வானத்திலும் பூமியிலும் உள்ள பேச்சுகளை அறிகிறான். அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கு அறிபவன்.
வசனம் : 5
بَلۡ قَالُوٓاْ أَضۡغَٰثُ أَحۡلَٰمِۭ بَلِ ٱفۡتَرَىٰهُ بَلۡ هُوَ شَاعِرٞ فَلۡيَأۡتِنَا بِـَٔايَةٖ كَمَآ أُرۡسِلَ ٱلۡأَوَّلُونَ
மாறாக, (அவர்களில் சிலர்) கூறினார்கள்: “(இது) பயமுறுத்துகின்ற கனவுகள்.” (மற்றும் சிலர் கூறினார்கள்:) “மாறாக, (முஹம்மத் இறைவன் மீது) இதை பொய்யாக இட்டுக்கட்டுகிறார்.” (வேறு சிலர் கூறினார்கள்): “மாறாக, இவர் ஒரு கவிஞர்.” “ஆகவே, முதலாமவர்கள் (முந்திய தூதர்கள்) அனுப்பப்பட்டது போன்று அவரும் எங்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வரட்டும்.” (என்று அவர்கள் கூறுகிறார்கள்).
வசனம் : 6
مَآ ءَامَنَتۡ قَبۡلَهُم مِّن قَرۡيَةٍ أَهۡلَكۡنَٰهَآۖ أَفَهُمۡ يُؤۡمِنُونَ
இவர்களுக்கு முன்னர், (அத்தாட்சியைக் கேட்ட) எந்த சமுதாயமும் (அந்த அத்தாட்சி வந்த பின்னர்) நம்பிக்கை கொள்ளவில்லை. ஆகவே, அவர்களை (எல்லாம்) நாம் அழித்தோம். எனவே, (மக்காவாசிகளாகிய) இவர்கள் (மட்டும்) (நமது அத்தாட்சிகள் அவர்களிடம் வந்தால் அவற்றை அவர்கள்) நம்பிக்கை கொள்வார்களா?
வசனம் : 7
وَمَآ أَرۡسَلۡنَا قَبۡلَكَ إِلَّا رِجَالٗا نُّوحِيٓ إِلَيۡهِمۡۖ فَسۡـَٔلُوٓاْ أَهۡلَ ٱلذِّكۡرِ إِن كُنتُمۡ لَا تَعۡلَمُونَ
உமக்கு முன்னர் நாம் (மனிதர்களான) ஆடவர்களைத் தவிர (வானவர்களை) தூதர்களாக அனுப்பவில்லை. அ(ந்த ஆட)வர்களுக்கு நாம் வஹ்யி அறிவித்தோம். ஆகவே, (மக்காவாசிகளே) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (முந்திய) வேதக்காரர்களிடம் நீங்கள் விசாரியுங்கள்,
வசனம் : 8
وَمَا جَعَلۡنَٰهُمۡ جَسَدٗا لَّا يَأۡكُلُونَ ٱلطَّعَامَ وَمَا كَانُواْ خَٰلِدِينَ
நாம் அ(ந்த தூது)வர்களை உணவு சாப்பிடாத உடல்களாக (-வானவர்களாக) ஆக்கவில்லை. இன்னும், அவர்கள் (மரணமில்லாத) நிரந்தரமானவர்களாகவும் இருக்கவில்லை.
வசனம் : 9
ثُمَّ صَدَقۡنَٰهُمُ ٱلۡوَعۡدَ فَأَنجَيۡنَٰهُمۡ وَمَن نَّشَآءُ وَأَهۡلَكۡنَا ٱلۡمُسۡرِفِينَ
பிறகு, நாம் அ(ந்த தூது)வர்களுக்கு (நமது) வாக்கை உண்மைப்படுத்தினோம். ஆக, நாம் அ(ந்த தூது)வர்களையும் நாம் நாடியவர்களையும் பாதுகாத்தோம். இன்னும், (நிராகரிப்பில்) எல்லை மீறியவர்களை நாம் அழித்தோம்.
வசனம் : 10
لَقَدۡ أَنزَلۡنَآ إِلَيۡكُمۡ كِتَٰبٗا فِيهِ ذِكۡرُكُمۡۚ أَفَلَا تَعۡقِلُونَ
திட்டமாக நாம் உங்களுக்கு ஒரு வேதத்தை இறக்கி இருக்கிறோம். அ(தைப் பின்பற்றுவ)தில் உங்கள் கண்ணியம் இருக்கிறது. நீங்கள் சிந்தித்துப் புரிய வேண்டாமா?

வசனம் : 11
وَكَمۡ قَصَمۡنَا مِن قَرۡيَةٖ كَانَتۡ ظَالِمَةٗ وَأَنشَأۡنَا بَعۡدَهَا قَوۡمًا ءَاخَرِينَ
தீயவர்களாக இருந்த எத்தனையோ பல ஊர்(வாசி)களை நாம் அழித்தோம். அவர்களுக்குப் பின்னர் வேறு மக்களை நாம் உருவாக்கினோம்.
வசனம் : 12
فَلَمَّآ أَحَسُّواْ بَأۡسَنَآ إِذَا هُم مِّنۡهَا يَرۡكُضُونَ
ஆக, அவர்கள் நமது தண்டனையை உணர்ந்தபோது அப்போது அவர்கள் அதிலிருந்து (தப்பிப்பதற்காக) விரைந்து ஓடினர்.
வசனம் : 13
لَا تَرۡكُضُواْ وَٱرۡجِعُوٓاْ إِلَىٰ مَآ أُتۡرِفۡتُمۡ فِيهِ وَمَسَٰكِنِكُمۡ لَعَلَّكُمۡ تُسۡـَٔلُونَ
விரைந்து ஓடாதீர்கள். நீங்கள் எதில் பெரும் இன்பம் அனுபவித்து வந்தீர்களோ அதன் பக்கமும் உங்கள் (ஆடம்பரமான) இல்லங்களின் பக்கமும் திரும்புங்கள்! “நீங்கள் (உங்கள் உலக செல்வத்திலிருந்து சிறிது) கேட்கப்படுவீர்கள்” (அதை கொடுத்து நீங்கள் தப்பித்து விடலாம் என்று கேலியாக கூறப்படும்.)
வசனம் : 14
قَالُواْ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ
(தண்டனை இறக்கப்பட்ட) அவர்கள் கூறினார்கள்: எங்கள் நாசமே! நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாக இருந்தோம்.
வசனம் : 15
فَمَا زَالَت تِّلۡكَ دَعۡوَىٰهُمۡ حَتَّىٰ جَعَلۡنَٰهُمۡ حَصِيدًا خَٰمِدِينَ
ஆக, அதுவே அவர்களது கூப்பாடாக நீடித்திருந்தது. இறுதியாக, அவர்களை (வாளால்) அறுக்கப்பட்டவர்களாக, அழிந்து நாசமடைந்தவர்களாக நாம் ஆக்கிவிட்டோம்.
வசனம் : 16
وَمَا خَلَقۡنَا ٱلسَّمَآءَ وَٱلۡأَرۡضَ وَمَا بَيۡنَهُمَا لَٰعِبِينَ
இன்னும், வானத்தையும் பூமியையும் அவ்விரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும் நாம் (வீண் விளையாட்டு) விளையாடுபவர்களாக படைக்கவில்லை.
வசனம் : 17
لَوۡ أَرَدۡنَآ أَن نَّتَّخِذَ لَهۡوٗا لَّٱتَّخَذۡنَٰهُ مِن لَّدُنَّآ إِن كُنَّا فَٰعِلِينَ
நாம் வேடிக்கையை (-மனைவியை) ஏற்படுத்த நாடி இருந்தால் அதை நம்மிடமிருந்தே ஏற்படுத்திக் கொண்டிருப்போம். (ஆனால், அது நமக்கு தகுதியானதல்ல என்பதால்) நாம் (அப்படி) செய்பவர்களாக இல்லை.
வசனம் : 18
بَلۡ نَقۡذِفُ بِٱلۡحَقِّ عَلَى ٱلۡبَٰطِلِ فَيَدۡمَغُهُۥ فَإِذَا هُوَ زَاهِقٞۚ وَلَكُمُ ٱلۡوَيۡلُ مِمَّا تَصِفُونَ
மாறாக, நாம் சத்தியத்தை அசத்தியத்தின் மீது எறிகிறோம். அதை உடைத்து விடுகிறது அது. அப்போது அ(ந்த அசத்தியமான)து அழிந்து விடுகிறது. நீங்கள் (உங்கள் இறைவனை தவறாக) வர்ணிக்கின்ற காரணத்தால் உங்களுக்கு அழிவுதான்.
வசனம் : 19
وَلَهُۥ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَمَنۡ عِندَهُۥ لَا يَسۡتَكۡبِرُونَ عَنۡ عِبَادَتِهِۦ وَلَا يَسۡتَحۡسِرُونَ
வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் அவனுக்கே உரிமையானவர்கள். இன்னும், அவனிடம் இருக்கின்ற (வான)வர்கள் அவனை வணங்குவதற்கு வீம்புபிடிக்க மாட்டார்கள். இன்னும் (அதில்) சோர்வடைய மாட்டார்கள்.
வசனம் : 20
يُسَبِّحُونَ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ لَا يَفۡتُرُونَ
அவர்கள் இரவு பகலாக (சடைவில்லாமல் அல்லாஹ்வை) துதிக்கிறார்கள். அவர்கள் பலவீனமடைய மாட்டார்கள்.
வசனம் : 21
أَمِ ٱتَّخَذُوٓاْ ءَالِهَةٗ مِّنَ ٱلۡأَرۡضِ هُمۡ يُنشِرُونَ
அ(ல்லாஹ்விற்கு இணைவைக்கின்ற அ)வர்கள், (மரணித்தவர்களை) உயிர்ப்பி(ப்பதற்கு சக்தி இரு)க்கின்ற கடவுள்களையா பூமியில் (வணக்க வழிபாட்டுக்கு) எடுத்துக் கொண்டார்கள்? (அல்லாஹ்வை அன்றி இறந்தவர்களை உயிர்ப்பிப்பவர் யார் இருக்கிறார்?)
வசனம் : 22
لَوۡ كَانَ فِيهِمَآ ءَالِهَةٌ إِلَّا ٱللَّهُ لَفَسَدَتَاۚ فَسُبۡحَٰنَ ٱللَّهِ رَبِّ ٱلۡعَرۡشِ عَمَّا يَصِفُونَ
(வானம், பூமி) அவை இரண்டிலும் அல்லாஹ்வைத் தவிர (வேறு) கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டும் சீரழிந்திருக்கும். ஆக, (இணைவைக்கும்) அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அர்ஷுடைய அதிபதியான அல்லாஹ் மகாத்தூயவன்.
வசனம் : 23
لَا يُسۡـَٔلُ عَمَّا يَفۡعَلُ وَهُمۡ يُسۡـَٔلُونَ
அவன் செய்வதைப் பற்றி கேள்வி கேட்கப்பட மாட்டான். அவர்கள்தான் கேள்வி கேட்கப்படுவார்கள்.
வசனம் : 24
أَمِ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ ءَالِهَةٗۖ قُلۡ هَاتُواْ بُرۡهَٰنَكُمۡۖ هَٰذَا ذِكۡرُ مَن مَّعِيَ وَذِكۡرُ مَن قَبۡلِيۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ ٱلۡحَقَّۖ فَهُم مُّعۡرِضُونَ
அவ(ன் ஒருவ)னை அன்றி பல கடவுள்களை அவர்கள் எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக: “உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள். இது என்னுடன் உள்ளவர்களைப் பற்றிய செய்தியாகும்; இன்னும், எனக்கு முன் உள்ளவர்களைப் பற்றிய செய்தியாகும். மாறாக, அவர்களில் அதிகமானவர்கள் சத்தியத்தை அறியமாட்டார்கள். ஆகவே, அவர்கள் (சத்தியத்தை) புறக்கணிப்பவர்கள் ஆவார்கள்.”

வசனம் : 25
وَمَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِيٓ إِلَيۡهِ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱعۡبُدُونِ
“நிச்சயமாக விஷயமாவது, என்னைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆகவே, என்னையே வணங்குங்கள்.” என்று நாம் வஹ்யி அறிவித்தே தவிர உமக்கு முன்னர் எந்த ஒரு தூதரையும் நாம் அனுப்பவில்லை.
வசனம் : 26
وَقَالُواْ ٱتَّخَذَ ٱلرَّحۡمَٰنُ وَلَدٗاۗ سُبۡحَٰنَهُۥۚ بَلۡ عِبَادٞ مُّكۡرَمُونَ
“ரஹ்மான் (தனக்கு) ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டான்” என்று அவர்கள் கூறுகிறார்கள். அவன் மகா தூயவன். (அந்த வானவர்கள் அவனுடைய மகள்கள் அல்ல.) மாறாக, அவனுடைய கண்ணியமான அடியார்கள் ஆவார்கள்.
வசனம் : 27
لَا يَسۡبِقُونَهُۥ بِٱلۡقَوۡلِ وَهُم بِأَمۡرِهِۦ يَعۡمَلُونَ
அவர்கள் பேச்சில் அவனை முந்தமாட்டார்கள். (எதிர்த்து பேச மாட்டார்கள்.) இன்னும், அவர்கள் அவனுடைய கட்டளையின்படியே செய்கிறார்கள்.
வசனம் : 28
يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡ وَلَا يَشۡفَعُونَ إِلَّا لِمَنِ ٱرۡتَضَىٰ وَهُم مِّنۡ خَشۡيَتِهِۦ مُشۡفِقُونَ
அ(ந்த வான)வர்களுக்கு முன் உள்ளதையும் அவர்களுக்குப் பின் உள்ளதையும் அவன் நன்கறிவான். அவன் விரும்பியவர்களுக்கே தவிர அவர்கள் சிபாரிசு செய்யமாட்டார்கள். இன்னும், அவர்கள் அவனுடைய அச்சத்தால் (அவனுக்கு மாறு செய்யாமல்) மிகுந்த எச்சரிக்கையுடன் பயந்தவர்களாக இருப்பார்கள்.
வசனம் : 29
۞ وَمَن يَقُلۡ مِنۡهُمۡ إِنِّيٓ إِلَٰهٞ مِّن دُونِهِۦ فَذَٰلِكَ نَجۡزِيهِ جَهَنَّمَۚ كَذَٰلِكَ نَجۡزِي ٱلظَّٰلِمِينَ
இன்னும், அவர்களில் யார் “நிச்சயமாக அவனை அன்றி நான்தான் கடவுள் என்று கூறுவாரோ அவருக்கு நரகத்தையே கூலியாக கொடுப்போம். இவ்வாறுதான், அநியாயக்காரர்களுக்கு கூலி கொடுப்போம்.
வசனம் : 30
أَوَلَمۡ يَرَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ أَنَّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ كَانَتَا رَتۡقٗا فَفَتَقۡنَٰهُمَاۖ وَجَعَلۡنَا مِنَ ٱلۡمَآءِ كُلَّ شَيۡءٍ حَيٍّۚ أَفَلَا يُؤۡمِنُونَ
அவர்கள் அறியவேண்டாமா? “நிச்சயமாக வானங்களும் பூமியும் சேர்ந்து இருந்தன. நாம்தான் அவற்றைப் பிளந்(து பிரித்)தோம். இன்னும் உயிருள்ள எல்லா வஸ்துகளையும் தண்ணீரிலிருந்து உருவாக்கினோம். அவர்கள் (படைத்த இறைவனை) நம்பிக்கை கொள்ளமாட்டார்களா?”
வசனம் : 31
وَجَعَلۡنَا فِي ٱلۡأَرۡضِ رَوَٰسِيَ أَن تَمِيدَ بِهِمۡ وَجَعَلۡنَا فِيهَا فِجَاجٗا سُبُلٗا لَّعَلَّهُمۡ يَهۡتَدُونَ
இன்னும், பூமியானது, அவர்களுடன் சாய்ந்து விடாமல் இருப்பதற்காக பூமியில் நாம் மலைகளை ஏற்படுத்தினோம். இன்னும், அவர்கள் (தங்கள் வாழ்வாதாரத்தை நோக்கி) சரியாக செல்வதற்காக அவர்களுக்கு அதில் விசாலமான பாதைகளை ஏற்படுத்தினோம்.
வசனம் : 32
وَجَعَلۡنَا ٱلسَّمَآءَ سَقۡفٗا مَّحۡفُوظٗاۖ وَهُمۡ عَنۡ ءَايَٰتِهَا مُعۡرِضُونَ
இன்னும், வானத்தை பாதுகாக்கப்பட்ட (உயர்த்தப்பட்ட) ஒரு முகடாக நாம் ஆக்கினோம். அவர்களோ அதில் உள்ள (சூரியன், சந்திரன், நட்ச்சத்திரம் போன்ற) அத்தாட்சிகளைப் (பார்த்தும் அவற்றை படைத்த அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாமல்) புறக்கணிக்கின்றார்கள்.
வசனம் : 33
وَهُوَ ٱلَّذِي خَلَقَ ٱلَّيۡلَ وَٱلنَّهَارَ وَٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ فِي فَلَكٖ يَسۡبَحُونَ
இன்னும், அவன்தான் இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். (அவை) ஒவ்வொன்றும் (ஒரு) சுற்று வட்டத்தில் நீந்துகின்றன.
வசனம் : 34
وَمَا جَعَلۡنَا لِبَشَرٖ مِّن قَبۡلِكَ ٱلۡخُلۡدَۖ أَفَإِيْن مِّتَّ فَهُمُ ٱلۡخَٰلِدُونَ
உமக்கு முன்னர் எந்த ஒரு மனிதருக்கும் (இப்பூமியில்) நிரந்தரமான வாழ்க்கையை நாம் ஆக்கவில்லை. ஆகவே, நீர் மரணித்து விட்டால் அவர்கள் (இப்பூமியில்) நிரந்தரமாக வாழ்ந்து விடுவார்களா?
வசனம் : 35
كُلُّ نَفۡسٖ ذَآئِقَةُ ٱلۡمَوۡتِۗ وَنَبۡلُوكُم بِٱلشَّرِّ وَٱلۡخَيۡرِ فِتۡنَةٗۖ وَإِلَيۡنَا تُرۡجَعُونَ
ஒவ்வோர் ஆன்மாவும் மரணத்தை சுவைக்கக் கூடியதாகும். துன்பத்தினாலும் இன்பத்தினாலும் உங்களை நாம் நன்கு சோதிப்போம். இன்னும், நம்மிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

வசனம் : 36
وَإِذَا رَءَاكَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَٰذَا ٱلَّذِي يَذۡكُرُ ءَالِهَتَكُمۡ وَهُم بِذِكۡرِ ٱلرَّحۡمَٰنِ هُمۡ كَٰفِرُونَ
(நபியே!) நிராகரிப்பாளர்கள் உம்மைப் பார்த்தால், உம்மை கேலியாக தவிர எடுத்துக் கொள்ளமாட்டார்கள். “இவரா உங்கள் கடவுள்களை விமர்ச்சிக்கிறார்” (என்று தங்களுக்குள் பேசுகிறார்கள்.) அவர்களோ (தங்களை படைத்து பரிபாலிக்கின்ற) ரஹ்மானை (நன்றியுடன்) நினைவு கூர மறுக்கிறார்கள்.
வசனம் : 37
خُلِقَ ٱلۡإِنسَٰنُ مِنۡ عَجَلٖۚ سَأُوْرِيكُمۡ ءَايَٰتِي فَلَا تَسۡتَعۡجِلُونِ
மனிதன் விரைவாக படைக்கப்பட்டான். எனது (தண்டனையின்) அத்தாட்சிகளை உங்களுக்கு விரைவில் காண்பிப்போம். ஆகவே, என்னிடம் அவசரப்படாதீர்கள்.
வசனம் : 38
وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (தண்டனையின்) இந்த வாக்கு எப்போது நிகழும் என அவர்கள் (உங்களிடம்) கூறுகிறார்கள்.
வசனம் : 39
لَوۡ يَعۡلَمُ ٱلَّذِينَ كَفَرُواْ حِينَ لَا يَكُفُّونَ عَن وُجُوهِهِمُ ٱلنَّارَ وَلَا عَن ظُهُورِهِمۡ وَلَا هُمۡ يُنصَرُونَ
நிராகரிப்பாளர்கள் தங்களது முகங்களை விட்டும் தங்களது முதுகுகளை விட்டும் நரக நெருப்பை தடுக்கமாட்டார்களே, இன்னும், அவர்கள் உதவிசெய்யப்பட மாட்டார்களே (அந்த) நேரத்தை அவர்கள் அறிந்து கொண்டால் (அல்லாஹ்வை நிராகரித்திருக்க மாட்டார்கள்).
வசனம் : 40
بَلۡ تَأۡتِيهِم بَغۡتَةٗ فَتَبۡهَتُهُمۡ فَلَا يَسۡتَطِيعُونَ رَدَّهَا وَلَا هُمۡ يُنظَرُونَ
மாறாக, அ(ந்த நரக நெருப்பான)து அவர்களிடம் திடீரென வரும். ஆக, அது அவர்களை திடுக்கிடச் செய்யும். அவர்கள் (தங்களை விட்டும்) அதை தடுப்பதற்கு இயல மாட்டார்கள். இன்னும், அவர்கள் (மன்னிப்புத் தேட) கால அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள்.
வசனம் : 41
وَلَقَدِ ٱسۡتُهۡزِئَ بِرُسُلٖ مِّن قَبۡلِكَ فَحَاقَ بِٱلَّذِينَ سَخِرُواْ مِنۡهُم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ
உமக்கு முன்னர் பல தூதர்கள் கேலி செய்யப்பட்டுள்ளார்கள். ஆக, அவர்களை கேலி செய்தவர்களை அவர்கள் எதைப் பற்றி கேலி செய்தார்களோ அதுவே சூழ்ந்து கொண்டது.
வசனம் : 42
قُلۡ مَن يَكۡلَؤُكُم بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ مِنَ ٱلرَّحۡمَٰنِۚ بَلۡ هُمۡ عَن ذِكۡرِ رَبِّهِم مُّعۡرِضُونَ
(நபியே!) கூறுவீராக! “இரவிலும் பகலிலும் உங்களை ரஹ்மானிடமிருந்து பாதுகாப்பவர் யார் இருக்கிறார்?” மாறாக, அவர்கள் தங்கள் இறைவனின் அறிவுரையை (-குர்ஆனை) புறக்கணிக்கிறார்கள்.
வசனம் : 43
أَمۡ لَهُمۡ ءَالِهَةٞ تَمۡنَعُهُم مِّن دُونِنَاۚ لَا يَسۡتَطِيعُونَ نَصۡرَ أَنفُسِهِمۡ وَلَا هُم مِّنَّا يُصۡحَبُونَ
அல்லது, அவர்களை (நமது தண்டனையிலிருந்து) பாதுகாக்கிற கடவுள்கள் நம்மை அன்றி அவர்களுக்கு உண்டா? (இவர்கள் கடவுள்கள் என்று வணங்கும்) அவர்கள் தங்களுக்கு உதவுவதற்கே இயலமாட்டார்கள். இன்னும் இ(ந்த நிராகரிப்ப)வர்கள் நம்மிடமிருந்து (யார் மூலமாகவும்) பாதுகாக்கப்பட மாட்டார்கள்.
வசனம் : 44
بَلۡ مَتَّعۡنَا هَٰٓؤُلَآءِ وَءَابَآءَهُمۡ حَتَّىٰ طَالَ عَلَيۡهِمُ ٱلۡعُمُرُۗ أَفَلَا يَرَوۡنَ أَنَّا نَأۡتِي ٱلۡأَرۡضَ نَنقُصُهَا مِنۡ أَطۡرَافِهَآۚ أَفَهُمُ ٱلۡغَٰلِبُونَ
மாறாக, இவர்களுக்கும் இவர்களின் மூதாதைகளுக்கும் (இவ்வுலக வாழ்க்கையில்) சுகமான வாழ்வளித்தோம். இறுதியாக இவர்களுக்கு வாழ்க்கை நீண்டு சென்றது. (நீண்ட காலம் சுகமாக வாழ்வோம் என்று நினைத்தனர்.) நிச்சயமாக நாம் பூமியை அதன் சுற்றுப்புறங்களிலிருந்து அழித்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? ஆகவே, இவர்கள் (இந்த மக்காவாசிகள் மட்டும் நமது தூதரை) மிகைத்து விடுவார்களா?

வசனம் : 45
قُلۡ إِنَّمَآ أُنذِرُكُم بِٱلۡوَحۡيِۚ وَلَا يَسۡمَعُ ٱلصُّمُّ ٱلدُّعَآءَ إِذَا مَا يُنذَرُونَ
(நபியே!) கூறுவீராக: நான் உங்களை எச்சரிப்பதெல்லாம் வஹ்யின் மூலமாகத்தான். இன்னும், செவிடர்களோ அவர்கள் எச்சரிக்கப்படும்போது (நேர்வழியின்) அழைப்புக்கு செவிசாய்க்க மாட்டார்கள்.
வசனம் : 46
وَلَئِن مَّسَّتۡهُمۡ نَفۡحَةٞ مِّنۡ عَذَابِ رَبِّكَ لَيَقُولُنَّ يَٰوَيۡلَنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ
உமது இறைவனின் தண்டனையிலிருந்து ஒரு பகுதி அவர்களை அடைந்தால், “எங்கள் நாசமே! நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று திட்டமாக கூறுவார்கள்.
வசனம் : 47
وَنَضَعُ ٱلۡمَوَٰزِينَ ٱلۡقِسۡطَ لِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ فَلَا تُظۡلَمُ نَفۡسٞ شَيۡـٔٗاۖ وَإِن كَانَ مِثۡقَالَ حَبَّةٖ مِّنۡ خَرۡدَلٍ أَتَيۡنَا بِهَاۗ وَكَفَىٰ بِنَا حَٰسِبِينَ
மறுமை நாளில் நீதமான தராசுகளை நாம் வைப்போம். ஆகவே, எந்த ஓர் ஆன்மாவுக்கும் அறவே அநீதி இழைக்கப்படாது. (அது செய்த செயல்) கடுகின் விதை அளவு இருந்தாலும் அதை(யும் விசாரணைக்கு) நாம் கொண்டு வருவோம். இன்னும், (அவர்களை) விசாரிப்பதற்கு நாமே போதுமானவர்கள்.
வசனம் : 48
وَلَقَدۡ ءَاتَيۡنَا مُوسَىٰ وَهَٰرُونَ ٱلۡفُرۡقَانَ وَضِيَآءٗ وَذِكۡرٗا لِّلۡمُتَّقِينَ
இறையச்சமுள்ளவர்கள் பயன் பெறுவதற்காக பிரித்தறிவிக்கக்கூடிய (சத்தியத்)தையும் வெளிச்ச(மிக்க வேத)த்தையும் அறிவுரையையும் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் திட்டவட்டமாக நாம் கொடுத்தோம்.
வசனம் : 49
ٱلَّذِينَ يَخۡشَوۡنَ رَبَّهُم بِٱلۡغَيۡبِ وَهُم مِّنَ ٱلسَّاعَةِ مُشۡفِقُونَ
அ(ந்த இறையச்சமுள்ள)வர்கள் தங்கள் இறைவனை மறைவில் (-இவ்வுலக வாழ்க்கையில்) பயப்படுவார்கள். இன்னும், அவர்கள் மறுமையை குறித்து (எச்சரிக்கையுடன்) அச்சப்படுவார்கள்.
வசனம் : 50
وَهَٰذَا ذِكۡرٞ مُّبَارَكٌ أَنزَلۡنَٰهُۚ أَفَأَنتُمۡ لَهُۥ مُنكِرُونَ
இது, பாக்கியமிகுந்த (அதிகமான நற்பலன்களை உடைய) ஓர் அறிவுரையாகும். நாம் இதை இறக்கினோம். ஆக, நீங்கள் இதை மறுக்கிறீர்களா?
வசனம் : 51
۞ وَلَقَدۡ ءَاتَيۡنَآ إِبۡرَٰهِيمَ رُشۡدَهُۥ مِن قَبۡلُ وَكُنَّا بِهِۦ عَٰلِمِينَ
(மூஸாவிற்கு) முன்னர் இப்ராஹீமுக்கு அவருக்குரிய நேரிய அறிவை திட்டமாக நாம் கொடுத்தோம். இன்னும் நாம் அவரை நன்கறிந்தவர்களாக இருந்தோம்.
வசனம் : 52
إِذۡ قَالَ لِأَبِيهِ وَقَوۡمِهِۦ مَا هَٰذِهِ ٱلتَّمَاثِيلُ ٱلَّتِيٓ أَنتُمۡ لَهَا عَٰكِفُونَ
அவர், தனது தந்தை இன்னும் தனது சமுதாயத்தை நோக்கி, “நீங்கள் இவற்றின் மீது நிலையாக (-பிடிவாதமாக) இருக்கின்ற இந்த உருவ சிலைகள் (உடைய உண்மை நிலைதான்) என்ன?” என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
வசனம் : 53
قَالُواْ وَجَدۡنَآ ءَابَآءَنَا لَهَا عَٰبِدِينَ
அவர்கள் கூறினார்கள்: “எங்கள் மூதாதைகள் அவற்றை வணங்குபவர்களாக இருப்பதை நாங்கள் கண்டோம்.”
வசனம் : 54
قَالَ لَقَدۡ كُنتُمۡ أَنتُمۡ وَءَابَآؤُكُمۡ فِي ضَلَٰلٖ مُّبِينٖ
(இப்ராஹீம்) கூறினார்: “திட்டமாக நீங்களும் உங்கள் மூதாதைகளும் தெளிவான வழிகேட்டில் இருக்கிறீர்கள்.”
வசனம் : 55
قَالُوٓاْ أَجِئۡتَنَا بِٱلۡحَقِّ أَمۡ أَنتَ مِنَ ٱللَّٰعِبِينَ
அவர்கள் கூறினார்கள்: “நீர் எங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்தீரா? அல்லது, நீர் (வீண் விளையாட்டு) விளையாடுபவர்களில் உள்ளவரா?”
வசனம் : 56
قَالَ بَل رَّبُّكُمۡ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ ٱلَّذِي فَطَرَهُنَّ وَأَنَا۠ عَلَىٰ ذَٰلِكُم مِّنَ ٱلشَّٰهِدِينَ
அவர் கூறினார்: “மாறாக, வானங்கள், இன்னும், பூமியின் இறைவன்தான் உங்கள் இறைவன் ஆவான். (இந்த சிலைகளில் எதுவும் அல்ல.) அவன்தான் அவற்றைப் படைத்தான். இன்னும், நான் இதற்கு சாட்சி கூறுபவர்களில் ஒருவன் ஆவேன்.
வசனம் : 57
وَتَٱللَّهِ لَأَكِيدَنَّ أَصۡنَٰمَكُم بَعۡدَ أَن تُوَلُّواْ مُدۡبِرِينَ
இன்னும், அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் (என்னிடமிருந்து) திரும்பிச் சென்ற பின்னர் உங்கள் சிலைகளுக்கு நிச்சயமாக நான் சதி திட்டம் செய்(து அவற்றை உடைத்துவிடு)வேன்.

வசனம் : 58
فَجَعَلَهُمۡ جُذَٰذًا إِلَّا كَبِيرٗا لَّهُمۡ لَعَلَّهُمۡ إِلَيۡهِ يَرۡجِعُونَ
ஆக, அவர் அவற்றை (உடைக்கப்பட்ட) சிறுசிறு துண்டுகளாக ஆக்கிவிட்டார், அவர்களுடைய பெரிய சிலையைத் தவிர. அவர்கள் அதனளவில் திரும்ப வருவதற்காக (அதை மட்டும் உடைக்காமல் விட்டுவிட்டார்).
வசனம் : 59
قَالُواْ مَن فَعَلَ هَٰذَا بِـَٔالِهَتِنَآ إِنَّهُۥ لَمِنَ ٱلظَّٰلِمِينَ
அவர்கள் கூறினார்கள்: எங்கள் கடவுள்களுடன் இப்படி யார் நடந்துகொண்டார்? நிச்சயமாக அவர் அநியாயக்காரர்களில் உள்ளவர் ஆவார்.
வசனம் : 60
قَالُواْ سَمِعۡنَا فَتٗى يَذۡكُرُهُمۡ يُقَالُ لَهُۥٓ إِبۡرَٰهِيمُ
அவர்கள் கூறினார்கள்: ஒரு வாலிபர் அவற்றை விமர்சிப்பதை நாங்கள் செவியுற்றோம். அவருக்கு இப்ராஹீம் என்று (பெயர்) சொல்லப்படும்.
வசனம் : 61
قَالُواْ فَأۡتُواْ بِهِۦ عَلَىٰٓ أَعۡيُنِ ٱلنَّاسِ لَعَلَّهُمۡ يَشۡهَدُونَ
அவர்கள் கூறினார்கள்: ஆக, அவரை மக்களின் கண்களுக்கு முன் கொண்டு வாருங்கள், (அவருக்கு கொடுக்கப்படும் தண்டனையை) அவர்கள் பார்ப்பதற்காக.
வசனம் : 62
قَالُوٓاْ ءَأَنتَ فَعَلۡتَ هَٰذَا بِـَٔالِهَتِنَا يَٰٓإِبۡرَٰهِيمُ
அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் இப்படி செய்தீரா?
வசனம் : 63
قَالَ بَلۡ فَعَلَهُۥ كَبِيرُهُمۡ هَٰذَا فَسۡـَٔلُوهُمۡ إِن كَانُواْ يَنطِقُونَ
அவர் கூறினார்: மாறாக, இதை அவர்களில் உள்ள இந்த பெரிய சிலைதான் செய்தது. ஆகவே, (உடைக்கப்பட்ட கடவுள்களாகிய) அவர்களிடமே நீங்கள் கேளுங்கள், அவர்கள் பேசக்கூடியவர்களாக இருந்தால்.
வசனம் : 64
فَرَجَعُوٓاْ إِلَىٰٓ أَنفُسِهِمۡ فَقَالُوٓاْ إِنَّكُمۡ أَنتُمُ ٱلظَّٰلِمُونَ
பிறகு, அவர்கள் தங்க(ளுக்கு)ள் (ஒருவர் மற்றவர்) பக்கம் திரும்பி (கேள்வி கேட்டுக்கொண்ட)னர். மேலும், “நிச்சயமாக (இத்தகைய சிலைகளை வணங்குகிற) நீங்கள்தான் அநியாயக்காரர்கள்” என்று (ஒருவர் மற்றவரை பார்த்துக்) கூறினார்கள்.
வசனம் : 65
ثُمَّ نُكِسُواْ عَلَىٰ رُءُوسِهِمۡ لَقَدۡ عَلِمۡتَ مَا هَٰٓؤُلَآءِ يَنطِقُونَ
பிறகு, அவர்கள் தலைகீழாக மாறினர். (திகைத்தனர், பின்னர் இப்ராஹீமுடைய ஆதாரத்தை வைத்தே அவரிடம்) “இவர்கள் பேச மாட்டார்கள் என்பதை நீர் திட்டவட்டமாக அறிவீர்தானே” என்று கூறினார்கள்.
வசனம் : 66
قَالَ أَفَتَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا يَنفَعُكُمۡ شَيۡـٔٗا وَلَا يَضُرُّكُمۡ
அவர் கூறினார்: உங்களுக்கு எதையும் பலனளிக்காத, (எதையும்) தீங்கிழைக்காததையா அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குகிறீர்கள்?
வசனம் : 67
أُفّٖ لَّكُمۡ وَلِمَا تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِۚ أَفَلَا تَعۡقِلُونَ
உங்களுக்கும் அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குபவர்களுக்கும் இழிவுதான். ஆக, நீங்கள் சிந்தித்து புரியமாட்டீர்களா?
வசனம் : 68
قَالُواْ حَرِّقُوهُ وَٱنصُرُوٓاْ ءَالِهَتَكُمۡ إِن كُنتُمۡ فَٰعِلِينَ
அவர்கள் கூறினார்கள்: அவரை எரித்து விடுங்கள். நீங்கள் (ஏதும் உதவி) செய்பவர்களாக இருந்தால் உங்கள் கடவுள்களுக்கு (இந்த) உதவி(யை) செய்யுங்கள்.
வசனம் : 69
قُلۡنَا يَٰنَارُ كُونِي بَرۡدٗا وَسَلَٰمًا عَلَىٰٓ إِبۡرَٰهِيمَ
(இப்ராஹீமை அவர்கள் நெருப்பில் போட்டபோது) நாம் கூறினோம்: “நெருப்பே! இப்ராஹீமுக்கு குளிர்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் ஆகிவிடு.”
வசனம் : 70
وَأَرَادُواْ بِهِۦ كَيۡدٗا فَجَعَلۡنَٰهُمُ ٱلۡأَخۡسَرِينَ
அவர்கள் அவருக்கு ஒரு சூழ்ச்சியை நாடினர். ஆக, நாம் அவர்களை பெரும் நஷ்டவாளிகளாக ஆக்கிவிட்டோம்.
வசனம் : 71
وَنَجَّيۡنَٰهُ وَلُوطًا إِلَى ٱلۡأَرۡضِ ٱلَّتِي بَٰرَكۡنَا فِيهَا لِلۡعَٰلَمِينَ
இன்னும், அவரையும் லூத்தையும் அகிலத்தார்களுக்கு நாம் அதில் அருள்வளம் புரிந்த பூமியின் பக்கம் அழைத்து சென்று பாதுகாத்தோம்.
வசனம் : 72
وَوَهَبۡنَا لَهُۥٓ إِسۡحَٰقَ وَيَعۡقُوبَ نَافِلَةٗۖ وَكُلّٗا جَعَلۡنَا صَٰلِحِينَ
இன்னும், நாம் அவருக்கு இஸ்ஹாக்கை வழங்கினோம். இன்னும், (அவருக்கு இஸ்ஹாக்கின் மகனான) யஅகூபை (நம் புறத்திலிருந்து அதிகப்படியான) அருட்கொடையாக வழங்கினோம். இன்னும், (அவர்கள்) அனைவரையும் நல்லவர்களாக ஆக்கினோம்.

வசனம் : 73
وَجَعَلۡنَٰهُمۡ أَئِمَّةٗ يَهۡدُونَ بِأَمۡرِنَا وَأَوۡحَيۡنَآ إِلَيۡهِمۡ فِعۡلَ ٱلۡخَيۡرَٰتِ وَإِقَامَ ٱلصَّلَوٰةِ وَإِيتَآءَ ٱلزَّكَوٰةِۖ وَكَانُواْ لَنَا عَٰبِدِينَ
இன்னும், நமது கட்டளையின்படி நேர்வழிகாட்டுகின்ற தலைவர்களாக நாம் அவர்களை ஆக்கினோம். இன்னும், நன்மைகளை செய்யும்படியும், தொழுகையை நிலை நிறுத்தும்படியும், ஸகாத்தை கொடுக்கும்படியும் நாம் அவர்களுக்கு வஹ்யி அறிவித்தோம். இன்னும், அவர்கள் நம்மை வணங்குபவர்களாக இருந்தார்கள்.
வசனம் : 74
وَلُوطًا ءَاتَيۡنَٰهُ حُكۡمٗا وَعِلۡمٗا وَنَجَّيۡنَٰهُ مِنَ ٱلۡقَرۡيَةِ ٱلَّتِي كَانَت تَّعۡمَلُ ٱلۡخَبَٰٓئِثَۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمَ سَوۡءٖ فَٰسِقِينَ
இன்னும், லூத்தை நினைவு கூர்வீராக! (மக்களுக்கு மத்தியில்) தீர்ப்பளிக்கின்ற சட்ட ஞானத்தையும் (மார்க்க) கல்வியையும் நாம் அவருக்கு கொடுத்தோம். இன்னும், அசிங்கமான செயல்களை செய்துகொண்டிருந்த ஊரிலிருந்து நாம் அவரை பாதுகாத்தோம். நிச்சயமாக அவர்கள் கெட்ட மக்களாக, பாவிகளாக இருந்தார்கள்.
வசனம் : 75
وَأَدۡخَلۡنَٰهُ فِي رَحۡمَتِنَآۖ إِنَّهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَ
இன்னும், அவரை நமது அருளில் நாம் சேர்த்துக் கொண்டோம். நிச்சயமாக அவர் நல்லவர்களில் உள்ளவர் ஆவார்.
வசனம் : 76
وَنُوحًا إِذۡ نَادَىٰ مِن قَبۡلُ فَٱسۡتَجَبۡنَا لَهُۥ فَنَجَّيۡنَٰهُ وَأَهۡلَهُۥ مِنَ ٱلۡكَرۡبِ ٱلۡعَظِيمِ
இன்னும் நூஹையும் நினைவு கூர்வீராக! அவர் இதற்கு முன்னர் (நம்மை) அழைத்தபோது, நாம் அவருக்கு பதிலளித்து அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பெரிய தண்டனையிலிருந்து பாதுகாத்தோம்.
வசனம் : 77
وَنَصَرۡنَٰهُ مِنَ ٱلۡقَوۡمِ ٱلَّذِينَ كَذَّبُواْ بِـَٔايَٰتِنَآۚ إِنَّهُمۡ كَانُواْ قَوۡمَ سَوۡءٖ فَأَغۡرَقۡنَٰهُمۡ أَجۡمَعِينَ
இன்னும், நமது அத்தாட்சிகளை பொய்ப்பித்த மக்களிடமிருந்து (அவரை) நாம் காப்பாற்றி அவருக்கு உதவி செய்தோம். நிச்சயமாக அவர்கள் கெட்ட மக்களாக இருந்தனர். ஆகவே, அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.
வசனம் : 78
وَدَاوُۥدَ وَسُلَيۡمَٰنَ إِذۡ يَحۡكُمَانِ فِي ٱلۡحَرۡثِ إِذۡ نَفَشَتۡ فِيهِ غَنَمُ ٱلۡقَوۡمِ وَكُنَّا لِحُكۡمِهِمۡ شَٰهِدِينَ
இன்னும், தாவூதையும் சுலைமானையும் நினைவு கூர்வீராக! அவ்விருவரும் விவசாயத்தின் விளைச்சலில் தீர்ப்பளித்த சமயத்தை நினைவு கூர்வீராக! அதில் (அந்த விளைச்சலில் வேறு) மக்களுடைய ஆடுகள் (இரவில்) நுழைந்த போது (அவை விளைச்சலை மேய்ந்து நாசப்படுத்தி விட்டன). (தாவூது, சுலைமான் மற்றும் அந்தக் கூட்டத்தார் ஆகிய) அவர்களின் தீர்ப்பை நாம் அறிந்தவர்களாக இருந்தோம்.
வசனம் : 79
فَفَهَّمۡنَٰهَا سُلَيۡمَٰنَۚ وَكُلًّا ءَاتَيۡنَا حُكۡمٗا وَعِلۡمٗاۚ وَسَخَّرۡنَا مَعَ دَاوُۥدَ ٱلۡجِبَالَ يُسَبِّحۡنَ وَٱلطَّيۡرَۚ وَكُنَّا فَٰعِلِينَ
ஆக, அ(ந்த பிரச்சினைக்குரிய சட்டத்)தை நாம் சுலைமானுக்கு புரிய வைத்தோம். இன்னும், (நமது தூதர்கள்) எல்லோருக்கும் ஞானத்தையும் (நீதி தொடர்பான சட்டக்) கல்வியையும் நாம் கொடுத்தோம். இன்னும், தாவூதுடன் மலைகளையும் பறவைகளையும் (அவை அவருடன் சேர்ந்து நம்மை) துதிக்கக்கூடியவையாக அடிபணிய வைத்தோம். இன்னும், (இதை விதியில் முன்பே) நாம் முடிவு செய்தவர்களாக இருந்தோம்.
வசனம் : 80
وَعَلَّمۡنَٰهُ صَنۡعَةَ لَبُوسٖ لَّكُمۡ لِتُحۡصِنَكُم مِّنۢ بَأۡسِكُمۡۖ فَهَلۡ أَنتُمۡ شَٰكِرُونَ
உங்களுக்காக கவச ஆடைகள் (இன்னும் ஆயுதங்கள்) செய்வதை நாம் அவருக்கு கற்றுக் கொடுத்தோம். ஏனெனில், உங்கள் போரில் (எதிரிகளின் தாக்குதலில் இருந்து) அவை உங்களை பாதுகாக்கும். ஆக, நீங்கள் (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்துவீர்களா?
வசனம் : 81
وَلِسُلَيۡمَٰنَ ٱلرِّيحَ عَاصِفَةٗ تَجۡرِي بِأَمۡرِهِۦٓ إِلَى ٱلۡأَرۡضِ ٱلَّتِي بَٰرَكۡنَا فِيهَاۚ وَكُنَّا بِكُلِّ شَيۡءٍ عَٰلِمِينَ
இன்னும், விரைவாக வீசக்கூடிய காற்றை சுலைமானுக்கு நாம் வசப்படுத்தினோம். அவருடைய கட்டளையின்படி நாம் அருள்புரிந்த பூமிக்கு அது (சுலைமானையும் அவருடைய படையையும் சுமந்து) செல்லும். இன்னும், நாம் எல்லாவற்றையும் அறிந்தவர்களாக இருந்தோம்.

வசனம் : 82
وَمِنَ ٱلشَّيَٰطِينِ مَن يَغُوصُونَ لَهُۥ وَيَعۡمَلُونَ عَمَلٗا دُونَ ذَٰلِكَۖ وَكُنَّا لَهُمۡ حَٰفِظِينَ
(கடலில்) அவருக்காக மூழ்கி (முத்து பவளங்களை எடுத்து) வருபவர்களையும் அது அல்லாத வேறு செயலை செய்பவர்களையும் ஷைத்தான்களில் இருந்து நாம் அவருக்கு அடிபணிய வைத்தோம். இன்னும், அவர்களை கண்காணிப்பவர்களாக நாம் இருந்தோம்.
வசனம் : 83
۞ وَأَيُّوبَ إِذۡ نَادَىٰ رَبَّهُۥٓ أَنِّي مَسَّنِيَ ٱلضُّرُّ وَأَنتَ أَرۡحَمُ ٱلرَّٰحِمِينَ
இன்னும், அய்யூபை நினைவு கூர்வீராக! அவர் தன் இறைவனை அழைத்தபோது, “நிச்சயமாக நான் (உனது அடிமை,) எனக்கு நோய் ஏற்பட்டது. நீயோ கருணையாளர்களில் மகா கருணையாளன்! (ஆகவே, எனக்கு சுகமளிப்பாயாக!”)
வசனம் : 84
فَٱسۡتَجَبۡنَا لَهُۥ فَكَشَفۡنَا مَا بِهِۦ مِن ضُرّٖۖ وَءَاتَيۡنَٰهُ أَهۡلَهُۥ وَمِثۡلَهُم مَّعَهُمۡ رَحۡمَةٗ مِّنۡ عِندِنَا وَذِكۡرَىٰ لِلۡعَٰبِدِينَ
ஆக, அவருக்கு நாம் பதிலளித்தோம். ஆக, அவருக்கு இருந்த நோயை (அவரை விட்டு) அகற்றினோம். இன்னும், அவருக்கு அவருடைய குடும்பத்தையும் அவர்களுடன் அவர்கள் போன்ற (மற்ற)வர்களையும் அவருக்கு வழங்கினோம், நம் புறத்திலிருந்து (அவர் மீது) கருணையாகவும் வணக்கசாலிகளுக்கு நினைவூட்டலாகவும் இருப்பதற்காக.
வசனம் : 85
وَإِسۡمَٰعِيلَ وَإِدۡرِيسَ وَذَا ٱلۡكِفۡلِۖ كُلّٞ مِّنَ ٱلصَّٰبِرِينَ
இன்னும், இஸ்மாயீலையும் இத்ரீஸையும் துல்கிஃப்லையும் நினைவு கூர்வீராக! (இவர்கள்) எல்லோரும் பொறுமையாளர்களில் உள்ளவர்கள்.
வசனம் : 86
وَأَدۡخَلۡنَٰهُمۡ فِي رَحۡمَتِنَآۖ إِنَّهُم مِّنَ ٱلصَّٰلِحِينَ
இவர்களை நமது அருளில் நாம் பிரவேசிக்க செய்தோம். நிச்சயமாக இவர்கள் (வணக்க வழிபாடுகளை அதிகம் செய்த) நல்லவர்களில் உள்ளவர்கள் ஆவார்கள்.
வசனம் : 87
وَذَا ٱلنُّونِ إِذ ذَّهَبَ مُغَٰضِبٗا فَظَنَّ أَن لَّن نَّقۡدِرَ عَلَيۡهِ فَنَادَىٰ فِي ٱلظُّلُمَٰتِ أَن لَّآ إِلَٰهَ إِلَّآ أَنتَ سُبۡحَٰنَكَ إِنِّي كُنتُ مِنَ ٱلظَّٰلِمِينَ
இன்னும், மீனுடையவரை நினைவு கூர்வீராக! அவர் கோபித்தவராக சென்றபோது, நாம் அவருக்கு அறவே நெருக்கடியை கொடுக்க மாட்டோம் என்று எண்ணினார். ஆக, அவர் இருள்களில் இருந்தவராக (என்னை) அழைத்தார், “நிச்சயமாக உன்னைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. நீ மகா பரிசுத்தமானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் இருக்கிறேன்.”
வசனம் : 88
فَٱسۡتَجَبۡنَا لَهُۥ وَنَجَّيۡنَٰهُ مِنَ ٱلۡغَمِّۚ وَكَذَٰلِكَ نُـۨجِي ٱلۡمُؤۡمِنِينَ
ஆக, அவருக்கு நாம் பதிலளித்தோம். இன்னும், அவரை கடும் துக்கத்திலிருந்து நாம் பாதுகாத்தோம். இப்படித்தான் நம்பிக்கையாளர்களை நாம் பாதுகாப்போம்.
வசனம் : 89
وَزَكَرِيَّآ إِذۡ نَادَىٰ رَبَّهُۥ رَبِّ لَا تَذَرۡنِي فَرۡدٗا وَأَنتَ خَيۡرُ ٱلۡوَٰرِثِينَ
இன்னும், ஸகரிய்யாவை நினைவு கூர்வீராக! அவர் தன் இறைவனை அழைத்தபோது, என் இறைவா! என்னை (சந்ததி இன்றி) தனி ஒருத்தனாக விட்டுவிடாதே! நீதான் வாரிசுகளில் மிகச் சிறந்தவன்.
வசனம் : 90
فَٱسۡتَجَبۡنَا لَهُۥ وَوَهَبۡنَا لَهُۥ يَحۡيَىٰ وَأَصۡلَحۡنَا لَهُۥ زَوۡجَهُۥٓۚ إِنَّهُمۡ كَانُواْ يُسَٰرِعُونَ فِي ٱلۡخَيۡرَٰتِ وَيَدۡعُونَنَا رَغَبٗا وَرَهَبٗاۖ وَكَانُواْ لَنَا خَٰشِعِينَ
ஆக, அவருக்கு நாம் பதிலளித்தோம். இன்னும், அவருக்கு யஹ்யாவை (வாரிசாக) வழங்கினோம். இன்னும், (அதற்கு முன்னர்) அவருடைய மனைவியை அவருக்கு சீர்படுத்தினோம். நிச்சயமாக அவர்கள் (எல்லோரும்) நன்மைகளில் விரைபவர்களாகவும் ஆர்வத்துடனும் பயத்துடனும் நம்மை அழைப்பவர்களாகவும் (-வணங்குபவர்களாகவும்) இருந்தனர். இன்னும் அவர்கள் நமக்கு (பயந்து) பணிந்தவர்களாக இருந்தனர்.

வசனம் : 91
وَٱلَّتِيٓ أَحۡصَنَتۡ فَرۡجَهَا فَنَفَخۡنَا فِيهَا مِن رُّوحِنَا وَجَعَلۡنَٰهَا وَٱبۡنَهَآ ءَايَةٗ لِّلۡعَٰلَمِينَ
இன்னும், தனது மறைவிடத்தை பாதுகாத்தவளை (-மர்யமை) நினைவு கூர்வீராக! (நாம் படைத்த) நமது உயிர்களிலிருந்து ஓர் உயிரை அவளில் (-அவளுடைய மேலாடையின் முன்பக்க வழியில்) நாம் ஊதினோம். இன்னும், அவளையும் அவளுடைய மகனையும் அகிலத்தார்களுக்கு ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்கினோம்.
வசனம் : 92
إِنَّ هَٰذِهِۦٓ أُمَّتُكُمۡ أُمَّةٗ وَٰحِدَةٗ وَأَنَا۠ رَبُّكُمۡ فَٱعۡبُدُونِ
நிச்சயமாக இதுதான் (நீங்கள் பின்பற்ற வேண்டிய) உங்கள் ஒரே மார்க்கமாகும். நான்தான் உங்கள் இறைவன். ஆகவே, என்னை (மட்டும் கலப்பற்ற முறையில்) வணங்குங்கள்.
வசனம் : 93
وَتَقَطَّعُوٓاْ أَمۡرَهُم بَيۡنَهُمۡۖ كُلٌّ إِلَيۡنَا رَٰجِعُونَ
இன்னும், அவர்கள் தங்களுக்கு மத்தியில் தங்கள் காரியத்தில் (பல பிரிவுகளாக) பிரிந்து விட்டனர். (அவர்கள்) எல்லோரும் நம்மிடமே திரும்புவார்கள்.
வசனம் : 94
فَمَن يَعۡمَلۡ مِنَ ٱلصَّٰلِحَٰتِ وَهُوَ مُؤۡمِنٞ فَلَا كُفۡرَانَ لِسَعۡيِهِۦ وَإِنَّا لَهُۥ كَٰتِبُونَ
ஆக, யார் - அவரோ நம்பிக்கையாளராக இருந்து, - நற்காரியங்களை செய்வாரோ அவருடைய (நல்ல) முயற்சிக்கு மறுப்பு இல்லை. (அவருக்கு கண்டிப்பாக நற்கூலி உண்டு.) இன்னும், நிச்சயமாக நாம் அதை பதிவு செய்(து பாதுகாத்து வரு)கிறோம்.
வசனம் : 95
وَحَرَٰمٌ عَلَىٰ قَرۡيَةٍ أَهۡلَكۡنَٰهَآ أَنَّهُمۡ لَا يَرۡجِعُونَ
நாம் அழித்த (அந்த) ஊர் (மக்கள்) மீது உறுதியாகி விட்டது, “நிச்சயமாக அவர்கள் (நேர்வழியின் பக்கம்) திரும்ப மாட்டார்கள்.” (ஆகவேதான் அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.)
வசனம் : 96
حَتَّىٰٓ إِذَا فُتِحَتۡ يَأۡجُوجُ وَمَأۡجُوجُ وَهُم مِّن كُلِّ حَدَبٖ يَنسِلُونَ
இறுதியாக, யஃஜூஜ் இன்னும் மஃஜூஜ் (உடைய அடைப்பு) திறக்கப்பட்டால், (மறுமை சம்பவித்து விடும்.) அவர்கள் உயரமான எல்லா இடத்திலிருந்தும் விரைந்து வருவார்கள்.
வசனம் : 97
وَٱقۡتَرَبَ ٱلۡوَعۡدُ ٱلۡحَقُّ فَإِذَا هِيَ شَٰخِصَةٌ أَبۡصَٰرُ ٱلَّذِينَ كَفَرُواْ يَٰوَيۡلَنَا قَدۡ كُنَّا فِي غَفۡلَةٖ مِّنۡ هَٰذَا بَلۡ كُنَّا ظَٰلِمِينَ
இன்னும், (மறுமை நிகழும் என) உண்மையான வாக்கு சமீபமாகிவிடும். அப்போது, நிராகரித்தவர்களின் பார்வைகள் கூர்மையாக (உற்று நோக்கிய வண்ணமாக) இருக்கும். “எங்கள் நாசமே! திட்டமாக நாங்கள் இதை (புறக்கணித்து) விட்டு அலட்சியத்தில் இருந்தோம். அது மட்டுமல்ல, நாங்கள் அநியாயக்காரர்களாக இருந்தோம்” (என்று அந்த நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்).
வசனம் : 98
إِنَّكُمۡ وَمَا تَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ حَصَبُ جَهَنَّمَ أَنتُمۡ لَهَا وَٰرِدُونَ
நிச்சயமாக நீங்களும் அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குபவையும் நரகத்தில் வீசி எறியப்படும் பொருளாவீர்கள். (இறைவனுக்கு மாறுசெய்த) நீங்கள் (எல்லோரும்) அதில் நுழைவீர்கள்.
வசனம் : 99
لَوۡ كَانَ هَٰٓؤُلَآءِ ءَالِهَةٗ مَّا وَرَدُوهَاۖ وَكُلّٞ فِيهَا خَٰلِدُونَ
(நாங்கள் வணங்கிய) இவை கடவுள்களாக இருந்திருந்தால் இ(ந்த நரகத்)தில் நுழைந்திருக்க மாட்டார்கள். “(அல்லாஹ்விற்கு இணை கற்பித்த நீங்கள்) எல்லோரும் அதில் நிரந்தரமாக தங்கி விடுவீர்கள்” (என்று அவர்களை நோக்கி கூறப்படும்).
வசனம் : 100
لَهُمۡ فِيهَا زَفِيرٞ وَهُمۡ فِيهَا لَا يَسۡمَعُونَ
அவர்களுக்கு அதில் கடுமையாக மூச்சு இறைத்தல் உண்டு. இன்னும், அவர்கள் அதில் (பிறரின் சத்தத்தை) செவியுற மாட்டார்கள்.
வசனம் : 101
إِنَّ ٱلَّذِينَ سَبَقَتۡ لَهُم مِّنَّا ٱلۡحُسۡنَىٰٓ أُوْلَٰٓئِكَ عَنۡهَا مُبۡعَدُونَ
நிச்சயமாக எவர்களுக்கு நம்மிடமிருந்து மிக அழகிய வாக்கு முந்திவிட்டதோ அவர்கள் அ(ந்த நரகத்)திலிருந்து தூரமாக்கப்பட்டு இருப்பார்கள்.

வசனம் : 102
لَا يَسۡمَعُونَ حَسِيسَهَاۖ وَهُمۡ فِي مَا ٱشۡتَهَتۡ أَنفُسُهُمۡ خَٰلِدُونَ
அவர்கள் அதன் சத்தத்தை செவியுறமாட்டார்கள். அவர்கள் தங்களது ஆன்மாக்கள் விரும்பிய (இன்பத்)தில் நிரந்தரமாக இருப்பார்கள்.
வசனம் : 103
لَا يَحۡزُنُهُمُ ٱلۡفَزَعُ ٱلۡأَكۡبَرُ وَتَتَلَقَّىٰهُمُ ٱلۡمَلَٰٓئِكَةُ هَٰذَا يَوۡمُكُمُ ٱلَّذِي كُنتُمۡ تُوعَدُونَ
மிகப்பெரிய திடுக்கம் அவர்களை கவலைக்குள்ளாக்காது. இன்னும், “நீங்கள் (சொர்க்கம் செல்வீர்கள் என்று) வாக்களிக்கப்பட்டு கொண்டிருந்த உங்கள் (மகிழ்ச்சியான) நாள் இதுதான்” (என்று கூறி) வானவர்கள் அவர்களை வரவேற்பார்கள்.
வசனம் : 104
يَوۡمَ نَطۡوِي ٱلسَّمَآءَ كَطَيِّ ٱلسِّجِلِّ لِلۡكُتُبِۚ كَمَا بَدَأۡنَآ أَوَّلَ خَلۡقٖ نُّعِيدُهُۥۚ وَعۡدًا عَلَيۡنَآۚ إِنَّا كُنَّا فَٰعِلِينَ
நூல்களுக்காக ஏடுகள் மடிக்கப்படுவது போன்று வானத்தை நாம் மடிக்கின்ற நாளில் (மறுமையின் திடுக்கம் அவர்களை கவலைக்குள்ளாக்காது). படைப்புகளை முதல் முறையாக நாம் படைத்தது போன்றே அவர்களை மீண்டும் உருவாக்குவோம். இது நம்மீது கடமையான வாக்காகும். நிச்சயமாக நாம் (இதை) செய்(து முடிப்)பவர்களாகவே இருக்கிறோம்.
வசனம் : 105
وَلَقَدۡ كَتَبۡنَا فِي ٱلزَّبُورِ مِنۢ بَعۡدِ ٱلذِّكۡرِ أَنَّ ٱلۡأَرۡضَ يَرِثُهَا عِبَادِيَ ٱلصَّٰلِحُونَ
“லவ்ஹுல் மஹ்ஃபூள்” (-விதியின் தாய் நூலில்) எழுதப்பட்டதற்குப் பின்னர். (இறைத்தூதர்கள் மீது இறக்கப்பட்ட) வேதங்களில் திட்டவட்டமாக நாம் எழுதினோம்: “நிச்சயமாக (சொர்க்க) பூமியானது, - அதை எனது நல்லடியார்கள்தான் சொந்தமாக்குவார்கள்.”
வசனம் : 106
إِنَّ فِي هَٰذَا لَبَلَٰغٗا لِّقَوۡمٍ عَٰبِدِينَ
நிச்சயமாக (அல்லாஹ்விற்கு இணைவைக்காமல் அவனை மட்டும்) வணங்குகின்ற மக்களுக்கு போதுமான அறிவுரை இ(ந்த வேதத்)தில் இருக்கிறது.
வசனம் : 107
وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا رَحۡمَةٗ لِّلۡعَٰلَمِينَ
(நபியே!) உம்மை அகிலத்தார்களுக்கு ஓர் அருளாகவே தவிர நாம் அனுப்பவில்லை.
வசனம் : 108
قُلۡ إِنَّمَا يُوحَىٰٓ إِلَيَّ أَنَّمَآ إِلَٰهُكُمۡ إِلَٰهٞ وَٰحِدٞۖ فَهَلۡ أَنتُم مُّسۡلِمُونَ
(நபியே!) நீர் கூறுவீராக! எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதெல்லாம் நிச்சயமாக (வணங்கத் தகுதியான) உங்கள் கடவுள் எல்லாம் ஒரே ஒரு கடவுள்தான். நீங்கள் (அவனுக்கு) முற்றிலும் கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து நடப்பீர்களா?
வசனம் : 109
فَإِن تَوَلَّوۡاْ فَقُلۡ ءَاذَنتُكُمۡ عَلَىٰ سَوَآءٖۖ وَإِنۡ أَدۡرِيٓ أَقَرِيبٌ أَم بَعِيدٞ مَّا تُوعَدُونَ
அவர்கள் விலகிச் சென்றால் (அவர்களை நோக்கி) நீர் கூறிவிடுவீராக: மிகத் தெளிவாக உங்களுக்கு நான் (அறிவிக்க வேண்டிய அனைத்தையும்) அறிவித்து விட்டேன். (இதற்கு மேல்) நீங்கள் எதை வாக்களிக்கப்பட்டீர்களோ அது சமீபமாக உள்ளதா அல்லது தூரமாக உள்ளதா என்பதை நான் அறியமாட்டேன்.
வசனம் : 110
إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ مِنَ ٱلۡقَوۡلِ وَيَعۡلَمُ مَا تَكۡتُمُونَ
நிச்சயமாக அவன் பேச்சில் வெளிப்படையானதையும் நன்கறிவான். இன்னும், நீங்கள் (உங்கள் உள்ளங்களில்) எதை மறைக்கிறீர்களோ அதையும் அவன் நன்கறிவான்.
வசனம் : 111
وَإِنۡ أَدۡرِي لَعَلَّهُۥ فِتۡنَةٞ لَّكُمۡ وَمَتَٰعٌ إِلَىٰ حِينٖ
அ(ல்லாஹ்வின் தண்டனை அல்லது மறுமை தாமதமாகுவ)து உங்களுக்கு சோதனையாகவும் ஒரு (குறிப்பிட்ட) நேரம் வரை (உங்களுக்கு) இன்பமாகவும் இருக்கலாம், நான் (அதை) அறியமாட்டேன்.
வசனம் : 112
قَٰلَ رَبِّ ٱحۡكُم بِٱلۡحَقِّۗ وَرَبُّنَا ٱلرَّحۡمَٰنُ ٱلۡمُسۡتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ
(அல்லாஹ்வின் தூதர்) கூறினார்: என் இறைவா! உண்மையான தீர்ப்பை (எங்களுக்கு) நீ தீர்ப்பாக வழங்குவாயாக! இன்னும், (அவர் மக்களை நோக்கி கூறினார்:) எங்கள் இறைவன் ரஹ்மான் - பேரருளாளன் ஆவான், நீங்கள் (அவனைப் பற்றி தவறாக) வர்ணிப்பதற்கு எதிராக அவனிடம் உதவி தேடப்படுகிறது.
வெற்றிகரமாக அனுப்பப்பட்டது