அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு

Tamil Translation - Abdulhamid Albaqoi

Scan the qr code to link to this page

سورة الزمر - ஸூரா ஸுமர்

பக்க எண்

வசனம்

வசனத்தின் உரை நடையை காண்பிக்கவும்
அடிக்குறிப்பைக் காண்பிக்கவும்

வசனம் : 1
تَنزِيلُ ٱلۡكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَكِيمِ
1. அல்லாஹ்வினால்தான் இவ்வேதம் இறக்கப்பட்டுள்ளது. அவன் (அனைவரையும்) மிகைத்தவன் (அனைவரையும் அறிந்த) ஞானமுடையவன்.
வசனம் : 2
إِنَّآ أَنزَلۡنَآ إِلَيۡكَ ٱلۡكِتَٰبَ بِٱلۡحَقِّ فَٱعۡبُدِ ٱللَّهَ مُخۡلِصٗا لَّهُ ٱلدِّينَ
2. (நபியே!) நிச்சயமாக நாம், உமக்கு இவ்வேதத்தை முற்றிலும் உண்மையைக் கொண்டு இறக்கி வைத்திருக்கிறோம். ஆகவே, முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு, பரிசுத்த மனதுடன் அவனை வணங்கி வருவீராக.
வசனம் : 3
أَلَا لِلَّهِ ٱلدِّينُ ٱلۡخَالِصُۚ وَٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَ مَا نَعۡبُدُهُمۡ إِلَّا لِيُقَرِّبُونَآ إِلَى ٱللَّهِ زُلۡفَىٰٓ إِنَّ ٱللَّهَ يَحۡكُمُ بَيۡنَهُمۡ فِي مَا هُمۡ فِيهِ يَخۡتَلِفُونَۗ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي مَنۡ هُوَ كَٰذِبٞ كَفَّارٞ
3. பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை, தங்களுக்குப் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள், ‘‘அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிக்க சமீபமாக்கி வைக்கும் என்பதற்காகவே தவிர நாம் இவற்றை வணங்கவில்லை'' (என்று கூறுகின்றனர்). அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் இவ்விஷயத்தைப் பற்றி, அல்லாஹ் (மறுமையில்) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) பொய்யர்களையும், (மனமுரண்டாக) நிராகரிப்பவர்களையும் நேரான வழியில் செலுத்துவதில்லை.
வசனம் : 4
لَّوۡ أَرَادَ ٱللَّهُ أَن يَتَّخِذَ وَلَدٗا لَّٱصۡطَفَىٰ مِمَّا يَخۡلُقُ مَا يَشَآءُۚ سُبۡحَٰنَهُۥۖ هُوَ ٱللَّهُ ٱلۡوَٰحِدُ ٱلۡقَهَّارُ
4. அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்பி இருந்தால், அவன் படைத்தவற்றில் அவன் விரும்பிய (மேலான)வற்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பான். (எனினும், இத்தகைய விஷயங்களிலிருந்து) அவன் மிக பரிசுத்தமானவன். அல்லாஹ் ஒரே ஒருவன்தான். (அவனுக்குச் சந்ததி இல்லை. அனைவரையும்) அவன் அடக்கி ஆளுகிறான்.
வசனம் : 5
خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِٱلۡحَقِّۖ يُكَوِّرُ ٱلَّيۡلَ عَلَى ٱلنَّهَارِ وَيُكَوِّرُ ٱلنَّهَارَ عَلَى ٱلَّيۡلِۖ وَسَخَّرَ ٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَۖ كُلّٞ يَجۡرِي لِأَجَلٖ مُّسَمًّىۗ أَلَا هُوَ ٱلۡعَزِيزُ ٱلۡغَفَّٰرُ
5. அவன், வானங்களையும் பூமியையும் உண்மையான காரணத்திற்கே படைத்திருக்கிறான். (வீணுக்காக அல்ல.) அவனே இரவைச் சுருட்டிப் பகலை விரிக்கிறான். அவனே பகலைச் சுருட்டி இரவை விரிக்கிறான். சூரியனையும், சந்திரனையும் அடக்கி வைத்திருக்கிறான். இவை ஒவ்வொன்றும், அவற்றுக்குக் (குறிப்பிட்ட எல்லைக்குள்) குறிப்பிட்ட காலப்படி நடக்கின்றன. (நபியே!) அறிந்துகொள்வீராக: நிச்சயமாக அவன் தான் அனைவரையும் மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.

வசனம் : 6
خَلَقَكُم مِّن نَّفۡسٖ وَٰحِدَةٖ ثُمَّ جَعَلَ مِنۡهَا زَوۡجَهَا وَأَنزَلَ لَكُم مِّنَ ٱلۡأَنۡعَٰمِ ثَمَٰنِيَةَ أَزۡوَٰجٖۚ يَخۡلُقُكُمۡ فِي بُطُونِ أُمَّهَٰتِكُمۡ خَلۡقٗا مِّنۢ بَعۡدِ خَلۡقٖ فِي ظُلُمَٰتٖ ثَلَٰثٖۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡ لَهُ ٱلۡمُلۡكُۖ لَآ إِلَٰهَ إِلَّا هُوَۖ فَأَنَّىٰ تُصۡرَفُونَ
6. அவன் உங்கள் அனைவரையும், ஆரம்பத்தில் ஒரே ஒரு மனிதரிலிருந்து தான் படைத்தான். பின்னர், அவரிலிருந்து அவருடைய மனைவியை அமைத்தான். (அந்த இருவரிலிருந்து, உங்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்திருக்கிறான்.) மேலும், (உங்கள் நன்மைக்காகவே) எட்டு வகை கால்நடைகளை (ஜோடி ஜோடியாகப்) படைத்திருக்கிறான். உங்கள் தாய்மார்களின் வயிற்றில், ஒன்றன்பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கிறான். இந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன். எல்லா ஆட்சிகளும் அவனுக்கே உரியன. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. ஆகவே, (அவனை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
வசனம் : 7
إِن تَكۡفُرُواْ فَإِنَّ ٱللَّهَ غَنِيٌّ عَنكُمۡۖ وَلَا يَرۡضَىٰ لِعِبَادِهِ ٱلۡكُفۡرَۖ وَإِن تَشۡكُرُواْ يَرۡضَهُ لَكُمۡۗ وَلَا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰۚ ثُمَّ إِلَىٰ رَبِّكُم مَّرۡجِعُكُمۡ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمۡ تَعۡمَلُونَۚ إِنَّهُۥ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ
7. அவனை நீங்கள் நிராகரித்துவிட்ட போதிலும் (அவனுக்கு நஷ்டமில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தேவையற்றவனாக இருக்கிறான். எனினும், தன் அடியார்கள் (தன்னை) நிராகரிப்பதை அவன் விரும்புவதே இல்லை. நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாயின், அதனால் உங்களைப் பற்றி அவன் திருப்தியடைவான். ஒருவனின் (பாவச்) சுமையை மற்றொருவன் சுமப்பதில்லை. இனி நீங்கள் செல்ல வேண்டியது உங்கள் இறைவனிடம்தான். அச்சமயம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான். உள்ளங்களில் உள்ளவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிகிறான்.
வசனம் : 8
۞ وَإِذَا مَسَّ ٱلۡإِنسَٰنَ ضُرّٞ دَعَا رَبَّهُۥ مُنِيبًا إِلَيۡهِ ثُمَّ إِذَا خَوَّلَهُۥ نِعۡمَةٗ مِّنۡهُ نَسِيَ مَا كَانَ يَدۡعُوٓاْ إِلَيۡهِ مِن قَبۡلُ وَجَعَلَ لِلَّهِ أَندَادٗا لِّيُضِلَّ عَن سَبِيلِهِۦۚ قُلۡ تَمَتَّعۡ بِكُفۡرِكَ قَلِيلًا إِنَّكَ مِنۡ أَصۡحَٰبِ ٱلنَّارِ
8. மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்படும் சமயத்தில், முற்றிலும் தன் இறைவனையே நோக்கிப் பிரார்த்தனை செய்த வண்ணமாயிருக்கிறான். இறைவன் தன்னிடமிருந்து ஓர் அருளை அவனுக்குப் புரியும் சமயத்தில், இதற்கு முன்னர், தான் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த அவனையே மறந்து விடுகிறான். அல்லாஹ்வுக்கு (பொய்யான தெய்வங்களை) இணைகளாக்கி மற்றவர்களையும் அவனுடைய பாதையிலிருந்து வழி கெடுக்கிறான். (நபியே! அவனை நோக்கி,) நீர் கூறுவீராக: ‘‘நீ (இவ்வாறு இறைவனை) நிராகரித்த வண்ணமே சிறிது காலம் சுகமனுபவி. (முடிவில்) நிச்சயமாக நீ நரகவாசிதான்.''
வசனம் : 9
أَمَّنۡ هُوَ قَٰنِتٌ ءَانَآءَ ٱلَّيۡلِ سَاجِدٗا وَقَآئِمٗا يَحۡذَرُ ٱلۡأٓخِرَةَ وَيَرۡجُواْ رَحۡمَةَ رَبِّهِۦۗ قُلۡ هَلۡ يَسۡتَوِي ٱلَّذِينَ يَعۡلَمُونَ وَٱلَّذِينَ لَا يَعۡلَمُونَۗ إِنَّمَا يَتَذَكَّرُ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ
9. எவன் மறுமையை பயந்து, தன் இறைவனின் அருளை எதிர்பார்த்து, இரவு காலங்களில் நின்றவனாகவும், சிரம் பணிந்தவனாகவும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்பவனா (நம்பிக்கை கொள்ளாது நிராகரிப்பவனைப் போலாவான்)? (நபியே!) நீர் கேட்பீராக: கல்வி அறிவுடையவரும், கல்வி அறிவில்லாதவரும் சமமாவார்களா? (இந்த குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுபவர்கள் எல்லாம் (கல்வி) அறிவுடையவர்தான்.
வசனம் : 10
قُلۡ يَٰعِبَادِ ٱلَّذِينَ ءَامَنُواْ ٱتَّقُواْ رَبَّكُمۡۚ لِلَّذِينَ أَحۡسَنُواْ فِي هَٰذِهِ ٱلدُّنۡيَا حَسَنَةٞۗ وَأَرۡضُ ٱللَّهِ وَٰسِعَةٌۗ إِنَّمَا يُوَفَّى ٱلصَّٰبِرُونَ أَجۡرَهُم بِغَيۡرِ حِسَابٖ
10. (நபியே!) கூறுவீராக: ‘‘நம்பிக்கைகொண்ட (என்) அடியார்களே! உங்கள் இறைவனுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். இம்மையில் நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) நன்மைதான் கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி மிக விசாலமானது. நிச்சயமாக பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றியே கொடுக்கப்படும்.

வசனம் : 11
قُلۡ إِنِّيٓ أُمِرۡتُ أَنۡ أَعۡبُدَ ٱللَّهَ مُخۡلِصٗا لَّهُ ٱلدِّينَ
11. (நபியே!) கூறுவீராக: ‘‘முற்றிலும் நான் அல்லாஹ்வுக்கே வழிப்பட்டு, வணக்கத்தை அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கி அவன் ஒருவனையே வணங்குமாறு ஏவப்பட்டுள்ளேன்.
வசனம் : 12
وَأُمِرۡتُ لِأَنۡ أَكُونَ أَوَّلَ ٱلۡمُسۡلِمِينَ
12. மேலும், அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிப்பட்டவர்களில் முதன்மையானவனாக இருக்குமாறும் ஏவப்பட்டுள்ளேன்''
வசனம் : 13
قُلۡ إِنِّيٓ أَخَافُ إِنۡ عَصَيۡتُ رَبِّي عَذَابَ يَوۡمٍ عَظِيمٖ
13. (மேலும்,) கூறுவீராக: ‘‘என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான ஒருநாளின் வேதனைக்கு நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.''
வசனம் : 14
قُلِ ٱللَّهَ أَعۡبُدُ مُخۡلِصٗا لَّهُۥ دِينِي
14. (மேலும்,) கூறுவீராக: ‘‘அல்லாஹ் ஒருவனையே கலப்பற்ற மனதுடன் நான் வணங்குவேன், அவனுக்கே என் வணக்கம் அனைத்தும் உரித்தானது''
வசனம் : 15
فَٱعۡبُدُواْ مَا شِئۡتُم مِّن دُونِهِۦۗ قُلۡ إِنَّ ٱلۡخَٰسِرِينَ ٱلَّذِينَ خَسِرُوٓاْ أَنفُسَهُمۡ وَأَهۡلِيهِمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ أَلَا ذَٰلِكَ هُوَ ٱلۡخُسۡرَانُ ٱلۡمُبِينُ
15. ‘‘அல்லாஹ்வையன்றி நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருங்கள். (ஆகவே, அதற்குரிய தண்டனையை அடைவீர்கள்.)'' “மெய்யாகவே நஷ்டமடைந்தவர்கள் யாரென்றால், (இறைவனுக்கு மாறுசெய்து) தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் மறுமையில் நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டவர்கள்தான். அறிந்து கொள்ளுங்கள் இதுதான் தெளிவான நஷ்டம் என்று (நபியே) கூறுவீராக.
வசனம் : 16
لَهُم مِّن فَوۡقِهِمۡ ظُلَلٞ مِّنَ ٱلنَّارِ وَمِن تَحۡتِهِمۡ ظُلَلٞۚ ذَٰلِكَ يُخَوِّفُ ٱللَّهُ بِهِۦ عِبَادَهُۥۚ يَٰعِبَادِ فَٱتَّقُونِ
16. (மறுமை நாளில்) ‘‘இவர்களின் (தலைக்கு) மேல் இருந்தும் நெருப்பு சூழ்ந்து கொள்ளும். இவர்களின் (பாதங்களின்) கீழ் இருந்தும் (நெருப்பு) சூழ்ந்து கொள்ளும்'' இதைக் கொண்டு அல்லாஹ் தன் அடியார்களை பயமுறுத்துகிறான். ‘‘என் அடியார்களே! எனக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்''
வசனம் : 17
وَٱلَّذِينَ ٱجۡتَنَبُواْ ٱلطَّٰغُوتَ أَن يَعۡبُدُوهَا وَأَنَابُوٓاْ إِلَى ٱللَّهِ لَهُمُ ٱلۡبُشۡرَىٰۚ فَبَشِّرۡ عِبَادِ
17. (ஆகவே,) ‘‘எவர்கள் ஷைத்தான்களை வணங்காது, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வையே முன்னோக்குகிறார்களோ, அவர்களுக்குத்தான் நற்செய்தி. (ஆகவே,) (நபியே!) நீர் எனது (நல்ல) அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக.''
வசனம் : 18
ٱلَّذِينَ يَسۡتَمِعُونَ ٱلۡقَوۡلَ فَيَتَّبِعُونَ أَحۡسَنَهُۥٓۚ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ هَدَىٰهُمُ ٱللَّهُۖ وَأُوْلَٰٓئِكَ هُمۡ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ
18. அவர்கள் எத்தகையவர்கள் என்றால், (குர்ஆனாகிய இப்)பேச்சை செவியுற்று, அதில் மிக அழகியதை பின்பற்றி நடக்கின்றனர். இவர்களையே, அல்லாஹ் நேரான பாதையில் செலுத்துகிறான். இவர்கள்தான் (உண்மையில்) அறிவுடையவர்கள் ஆவார்கள்.
வசனம் : 19
أَفَمَنۡ حَقَّ عَلَيۡهِ كَلِمَةُ ٱلۡعَذَابِ أَفَأَنتَ تُنقِذُ مَن فِي ٱلنَّارِ
19. (நபியே!) ‘‘எவன் (பாவம் செய்து அவன்) மீது வேதனையின் வாக்கு உறுதியாகி விட்டதோ அவனா (நேர்வழி பெற்றவர்களுக்கு சமமாவான்)? (அவன் நரகம் சென்றே தீருவான்.) நரகத்திலிருக்கும் அவனை நீர் காப்பாற்றி விடுவீரா?''
வசனம் : 20
لَٰكِنِ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ رَبَّهُمۡ لَهُمۡ غُرَفٞ مِّن فَوۡقِهَا غُرَفٞ مَّبۡنِيَّةٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۖ وَعۡدَ ٱللَّهِ لَا يُخۡلِفُ ٱللَّهُ ٱلۡمِيعَادَ
20. எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடக்கிறார்களோ அவர்களுக்கு, (சொர்க்கத்தில்) மேல்மாடிகள் உண்டு. அதற்கு மேலும் கட்டடங்கள் எழுப்பப்பட்டிருக்கும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். (இவ்வாறே அவர்களுக்கு) அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். அல்லாஹ் தன் வாக்குறுதியில் மாறமாட்டான்.
வசனம் : 21
أَلَمۡ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءٗ فَسَلَكَهُۥ يَنَٰبِيعَ فِي ٱلۡأَرۡضِ ثُمَّ يُخۡرِجُ بِهِۦ زَرۡعٗا مُّخۡتَلِفًا أَلۡوَٰنُهُۥ ثُمَّ يَهِيجُ فَتَرَىٰهُ مُصۡفَرّٗا ثُمَّ يَجۡعَلُهُۥ حُطَٰمًاۚ إِنَّ فِي ذَٰلِكَ لَذِكۡرَىٰ لِأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ
21. (நபியே!) ‘‘நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்தான், மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து, அதைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கிறான். பின்னர், அதைக் கொண்டு பல நிறங்களையுடைய (பலவகைப்) பயிர்களை வெளிப்படுத்துகிறான். பின்னர், அவை (கருக்கொண்டு) மஞ்சள் நிறமாக இருக்கக் காண்கிறீர்கள். பின்னர், அதைக் காய்ந்த சருகுகளாக ஆக்கிவிடுகிறான். நிச்சயமாக இதில் அறிவுடையவர்களுக்கு நல்ல படிப்பினை இருக்கிறது.''

வசனம் : 22
أَفَمَن شَرَحَ ٱللَّهُ صَدۡرَهُۥ لِلۡإِسۡلَٰمِ فَهُوَ عَلَىٰ نُورٖ مِّن رَّبِّهِۦۚ فَوَيۡلٞ لِّلۡقَٰسِيَةِ قُلُوبُهُم مِّن ذِكۡرِ ٱللَّهِۚ أُوْلَٰٓئِكَ فِي ضَلَٰلٖ مُّبِينٍ
22. எவருடைய உள்ளத்தை இஸ்லாமை ஏற்க அல்லாஹ் விசாலப்படுத்தினானோ அவர், தன் இறைவனின் பிரகாசத்தில் இருக்கிறார். அல்லாஹ்வை ஞாபகம் செய்வதிலிருந்து விலகி, எவர்களுடைய உள்ளங்கள் (இறுகி) கடினமாகி விட்டனவோ அவர்களுக்குக் கேடுதான். இவர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.
வசனம் : 23
ٱللَّهُ نَزَّلَ أَحۡسَنَ ٱلۡحَدِيثِ كِتَٰبٗا مُّتَشَٰبِهٗا مَّثَانِيَ تَقۡشَعِرُّ مِنۡهُ جُلُودُ ٱلَّذِينَ يَخۡشَوۡنَ رَبَّهُمۡ ثُمَّ تَلِينُ جُلُودُهُمۡ وَقُلُوبُهُمۡ إِلَىٰ ذِكۡرِ ٱللَّهِۚ ذَٰلِكَ هُدَى ٱللَّهِ يَهۡدِي بِهِۦ مَن يَشَآءُۚ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنۡ هَادٍ
23. அல்லாஹ் மிக அழகான விஷயங்களையே (இந்த வேதத்தில்) இறக்கி இருக்கிறான். (இதிலுள்ள வசனங்களுக்கிடையில் முரண்பாடில்லாமல்)ஒன்றை மற்றொன்று ஒத்ததாகவும் (மனதில் பதிவதற்காக ஒரே விஷயத்தை) திரும்பத் திரும்பவும் கூறப்பட்டுள்ளது. எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயப்படுகிறார்களோ, (அவர்கள் அதைக் கேட்ட உடன்) அவர்களுடைய தோல்கள் சிலிர்த்து விடுகின்றன. பின்னர், அவர்களுடைய தோல்களும் உள்ளங்களும் அல்லாஹ்வுடைய வேதத்தின் பக்கம் இளகி அதன்படி செயல்படுகின்றன. இதுவே அல்லாஹ்வுடைய நேரான வழியாகும். தான் விரும்பியவர்களை இதன் மூலம் அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான். எவனை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விட்டானோ அவனை நேர்வழி செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை.
வசனம் : 24
أَفَمَن يَتَّقِي بِوَجۡهِهِۦ سُوٓءَ ٱلۡعَذَابِ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ وَقِيلَ لِلظَّٰلِمِينَ ذُوقُواْ مَا كُنتُمۡ تَكۡسِبُونَ
24. எவன், மறுமையின் கொடிய வேதனையைத் தன் முகத்தைக் கொண்டேனும் தடுத்துக் கொள்ளப் பிரயாசைப்படுபவனா (சொர்க்கவாசிக்கு சமமாவான்)? அநியாயக்காரர்களை நோக்கி நீங்கள் தேடிக் கொண்ட (தீய) செயலைச் சுவைத்துப் பாருங்கள் என்றுதான் கூறப்படும்.
வசனம் : 25
كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَأَتَىٰهُمُ ٱلۡعَذَابُ مِنۡ حَيۡثُ لَا يَشۡعُرُونَ
25. (இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், (நம் வசனங்களைப்) பொய்யாக்கினார்கள். ஆதலால், (வேதனை வருமென்பதை) அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்து கொள்ளாத விதத்தில், வேதனை அவர்களை வந்தடைந்தது.
வசனம் : 26
فَأَذَاقَهُمُ ٱللَّهُ ٱلۡخِزۡيَ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَاۖ وَلَعَذَابُ ٱلۡأٓخِرَةِ أَكۡبَرُۚ لَوۡ كَانُواْ يَعۡلَمُونَ
26. இவ்வுலக வாழ்க்கையிலும் இழிவையே அவர்கள் சுவைக்கும்படி அல்லாஹ் செய்தான். மறுமையிலுள்ள வேதனையோ மிகப் பெரிது. (இதை) அவர்கள் அறிந்து கொள்ளவேண்டுமே!
வசனம் : 27
وَلَقَدۡ ضَرَبۡنَا لِلنَّاسِ فِي هَٰذَا ٱلۡقُرۡءَانِ مِن كُلِّ مَثَلٖ لَّعَلَّهُمۡ يَتَذَكَّرُونَ
27. மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக, இந்த குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் நாம் தெளிவாக கூறியிருக்கிறோம்.
வசனம் : 28
قُرۡءَانًا عَرَبِيًّا غَيۡرَ ذِي عِوَجٖ لَّعَلَّهُمۡ يَتَّقُونَ
28. (அல்லாஹ்வுக்கு) அவர்கள் பயந்து கொள்வதற்காக கோணலற்ற இக்குர்ஆனை(த் தெளிவான) அரபி மொழியில் இறக்கிவைத்தோம்.
வசனம் : 29
ضَرَبَ ٱللَّهُ مَثَلٗا رَّجُلٗا فِيهِ شُرَكَآءُ مُتَشَٰكِسُونَ وَرَجُلٗا سَلَمٗا لِّرَجُلٍ هَلۡ يَسۡتَوِيَانِ مَثَلًاۚ ٱلۡحَمۡدُ لِلَّهِۚ بَلۡ أَكۡثَرُهُمۡ لَا يَعۡلَمُونَ
29. அல்லாஹ் ஓர் உதாரணத்தைக் கூறுகிறான்: ஒரு மனிதன் பல எஜமான்களுக்கு (அடிமையாக) இருந்து (அவர்கள் ஒவ்வொருவரும், தனக்கே அவன் வேலை செய்யவேண்டுமென்று) இழுபறி செய்து கொள்கின்றனர். மற்றொரு மனிதன் (அடிமைதான்; ஆனால், அவன்) ஒருவனுக்கு மட்டும் சொந்தமானவன். இவ்விருவரும் தன்மையால் சமமாவார்களா? (ஆகமாட்டார்கள் என்பதை அறிவீர்கள். ஆகவே, இதற்காக) புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே (என்று துதி செய்வோமாக! இவ்வாறே பல தெய்வங்களை வணங்கும் ஒருவன், ஒரே அல்லாஹ்வை வணங்குபவனுக்கு சமமாக மாட்டான். எனினும்,) அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை கூட) அறிந்து கொள்ளவில்லை.
வசனம் : 30
إِنَّكَ مَيِّتٞ وَإِنَّهُم مَّيِّتُونَ
30. (நபியே!) நிச்சயமாக நீரும் இறந்துவிடக்கூடியவரே. நிச்சயமாக அவர்களும் இறந்துவிடக் கூடியவர்கள்தான்.
வசனம் : 31
ثُمَّ إِنَّكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ عِندَ رَبِّكُمۡ تَخۡتَصِمُونَ
31. பின்னர், மறுமையில் நிச்சயமாக நீங்கள் அனைவரும் உங்கள் இறைவனிடத்தில் (கொண்டுவரப்பட்டு) நீங்கள் (நீதத்தைக் கோரி உங்களுக்குள்) தர்க்கித்துக் கொள்வீர்கள்.

வசனம் : 32
۞ فَمَنۡ أَظۡلَمُ مِمَّن كَذَبَ عَلَى ٱللَّهِ وَكَذَّبَ بِٱلصِّدۡقِ إِذۡ جَآءَهُۥٓۚ أَلَيۡسَ فِي جَهَنَّمَ مَثۡوٗى لِّلۡكَٰفِرِينَ
32. அல்லாஹ்வின் மீது பொய் கூறி தன்னிடம் வந்த (வேதமாகிய) உண்மையைப் பொய்யாக்குபவனைவிட மகா அநியாயக்காரன் யார்? அத்தகைய நிராகரிப்பவர்கள் தங்குமிடம் நரகத்தில் இல்லையா?
வசனம் : 33
وَٱلَّذِي جَآءَ بِٱلصِّدۡقِ وَصَدَّقَ بِهِۦٓ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُتَّقُونَ
33. உண்மையைக் கொண்டுவந்தவ(ராகிய நம் தூத)ரும், அதை உண்மை என்றே நம்பியவரும் ஆகிய இவர்கள்தான் இறையச்சமுடையவர்கள்.
வசனம் : 34
لَهُم مَّا يَشَآءُونَ عِندَ رَبِّهِمۡۚ ذَٰلِكَ جَزَآءُ ٱلۡمُحۡسِنِينَ
34. அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்களின் இறைவனிடத்தில் அவர்களுக்குக் கிடைக்கும். (ஏனென்றால், இத்தகைய) நன்மை செய்தவர்களுக்கு இதுவே (தகுதியான) கூலியாகும்.
வசனம் : 35
لِيُكَفِّرَ ٱللَّهُ عَنۡهُمۡ أَسۡوَأَ ٱلَّذِي عَمِلُواْ وَيَجۡزِيَهُمۡ أَجۡرَهُم بِأَحۡسَنِ ٱلَّذِي كَانُواْ يَعۡمَلُونَ
35. அவர்கள் செய்த குற்றங்களையும் அல்லாஹ் மன்னித்து, அவர்களுடைய கூலியை அவர்கள் செய்ததைவிட மிக அழகான விதத்தில் கொடுப்பான்.
வசனம் : 36
أَلَيۡسَ ٱللَّهُ بِكَافٍ عَبۡدَهُۥۖ وَيُخَوِّفُونَكَ بِٱلَّذِينَ مِن دُونِهِۦۚ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنۡ هَادٖ
36. தன் அடியாருக்கு (வேண்டிய உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமானவனாக இல்லையா? (நபியே!) அவர்கள் (தங்கள் தெய்வங்களாகிய) அல்லாஹ் அல்லாதவற்றைப் பற்றி உங்களை பயமுறுத்துகின்றனர். (அதை நீர் பொருட்படுத்த வேண்டாம்.) எவனை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ, அவனை நேரான வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை.
வசனம் : 37
وَمَن يَهۡدِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن مُّضِلٍّۗ أَلَيۡسَ ٱللَّهُ بِعَزِيزٖ ذِي ٱنتِقَامٖ
37. எவனை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவனை, வழிகெடுப்பவன் ஒருவனுமில்லை. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக பழிவாங்க ஆற்றல் உடையவனாக இல்லையா?
வசனம் : 38
وَلَئِن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ لَيَقُولُنَّ ٱللَّهُۚ قُلۡ أَفَرَءَيۡتُم مَّا تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ إِنۡ أَرَادَنِيَ ٱللَّهُ بِضُرٍّ هَلۡ هُنَّ كَٰشِفَٰتُ ضُرِّهِۦٓ أَوۡ أَرَادَنِي بِرَحۡمَةٍ هَلۡ هُنَّ مُمۡسِكَٰتُ رَحۡمَتِهِۦۚ قُلۡ حَسۡبِيَ ٱللَّهُۖ عَلَيۡهِ يَتَوَكَّلُ ٱلۡمُتَوَكِّلُونَ
38. (நபியே!) வானங்களையும் பூமியையும், படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீராயின், ‘‘அல்லாஹ்தான்'' என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். மேலும், (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கிழைக்க நாடினால், (நீங்கள் தெய்வங்களென அழைக்கும் அல்லாஹ் அல்லாத) அவை அத்தீங்கை நீக்கிவிட முடியுமா என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அல்லது அவன் எனக்கு ஏதும் அருள்புரிய நாடினால், அவனுடைய அருளை இவை தடுத்துவிடுமா (என்பதையும் நீங்கள் கவனித்தீர்களா)? (நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ் (ஒருவனே) எனக்குப் போதுமானவன். நம்பக்கூடியவர்கள் அனைவரும் அவனையே நம்பவும்.''
வசனம் : 39
قُلۡ يَٰقَوۡمِ ٱعۡمَلُواْ عَلَىٰ مَكَانَتِكُمۡ إِنِّي عَٰمِلٞۖ فَسَوۡفَ تَعۡلَمُونَ
39. (மேலும், நபியே!) கூறுவீராக: ‘‘என் மக்களே! நீங்கள் உங்கள் நிலைமையில் இருந்து கொண்டு நீங்கள் (செய்யக்கூடியதைச்) செய்து கொண்டிருங்கள். நானும் (என் நிலையிலிருந்து கொண்டு, நான் செய்யக் கூடியதை) செய்து வருவேன். (எவருடைய செயல் தவறு என்பதைப்) பின்னர், நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.''
வசனம் : 40
مَن يَأۡتِيهِ عَذَابٞ يُخۡزِيهِ وَيَحِلُّ عَلَيۡهِ عَذَابٞ مُّقِيمٌ
40. இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடைகிறது? நிலையான வேதனை எவர் மீது இறங்குகிறது? (என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.)

வசனம் : 41
إِنَّآ أَنزَلۡنَا عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ لِلنَّاسِ بِٱلۡحَقِّۖ فَمَنِ ٱهۡتَدَىٰ فَلِنَفۡسِهِۦۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيۡهَاۖ وَمَآ أَنتَ عَلَيۡهِم بِوَكِيلٍ
41. (நபியே!) நிச்சயமாக நாம் மனிதர்களின் நன்மைக்காகவே முற்றிலும் உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை உம் மீது இறக்கி வைத்தோம். ஆகவே, எவன் இதைப் பின்பற்றி நடக்கிறானோ, அது அவனுக்கே நன்று; எவன் (இதிலிருந்து) வழிதவறி விடுகிறானோ அவன், வழி தவறியது அவனுக்கே தீங்காக முடியும். (நபியே!) நீர் அவர்கள் மீது பொறுப்பாளர் அல்ல.
வசனம் : 42
ٱللَّهُ يَتَوَفَّى ٱلۡأَنفُسَ حِينَ مَوۡتِهَا وَٱلَّتِي لَمۡ تَمُتۡ فِي مَنَامِهَاۖ فَيُمۡسِكُ ٱلَّتِي قَضَىٰ عَلَيۡهَا ٱلۡمَوۡتَ وَيُرۡسِلُ ٱلۡأُخۡرَىٰٓ إِلَىٰٓ أَجَلٖ مُّسَمًّىۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يَتَفَكَّرُونَ
42. மனிதர்கள் இறக்கும்பொழுதும், இறக்காமல் நித்திரையில் இருக்கும் பொழுதும் அல்லாஹ்வே அவர்களுடைய உயிரைக் கைப்பற்றுகிறான். பின்னர், எவர்கள் மீது மரணம் விதிக்கப்பட்டதோ அவர்களுடைய உயிரை(த் தன்னிடமே) நிறுத்திக் கொள்கிறான். மற்றவர்க(ளின் உயிர்க)ளை, குறிப்பிடப்பட்ட காலம்வரை வாழ அவன் அவர்களிடமே அனுப்பிவிடுகிறான். சிந்திக்கக்கூடிய மக்களுக்கு, நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.
வசனம் : 43
أَمِ ٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ شُفَعَآءَۚ قُلۡ أَوَلَوۡ كَانُواْ لَا يَمۡلِكُونَ شَيۡـٔٗا وَلَا يَعۡقِلُونَ
43. இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குச்) சிபாரிசு செய்பவர்கள் என்று (எண்ணி) எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? ‘‘அவை எதற்கும் சக்தி அற்றதாக, எதையும் அறியக்கூடிய உணர்ச்சி அற்றதாக இருந்தாலுமா (அவற்றை நீங்கள் உங்களுக்குச் சிபாரிசு செய்பவை என்று எடுத்துக் கொள்வீர்கள்)?'' என்று (நபியே!) அவர்களைக் கேட்பீராக.
வசனம் : 44
قُل لِّلَّهِ ٱلشَّفَٰعَةُ جَمِيعٗاۖ لَّهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۖ ثُمَّ إِلَيۡهِ تُرۡجَعُونَ
44. (மேலும் நபியே!) கூறுவீராக: சிபாரிசுகள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி, அவனிடத்தில் ஒருவரும் சிபாரிசு செய்ய முடியாது.) வானங்கள் பூமியின் ஆட்சி முழுவதும் அல்லாஹ்வுக்குரியதே. பின்னர், (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.
வசனம் : 45
وَإِذَا ذُكِرَ ٱللَّهُ وَحۡدَهُ ٱشۡمَأَزَّتۡ قُلُوبُ ٱلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِۖ وَإِذَا ذُكِرَ ٱلَّذِينَ مِن دُونِهِۦٓ إِذَا هُمۡ يَسۡتَبۡشِرُونَ
45. அல்லாஹ்வின் பெயரை மட்டும் தனியாகக் கூறப்பட்டால், மறுமையை நம்பாத அவர்களின் உள்ளங்கள் (கோபத்தால்) சுருங்கி விடுகின்றன. அவன் அல்லாதவை(களின் பெயர்கள்) கூறப்பட்டாலோ, அவர்கள் சந்தோஷப்படுகின்றனர்.
வசனம் : 46
قُلِ ٱللَّهُمَّ فَاطِرَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ عَٰلِمَ ٱلۡغَيۡبِ وَٱلشَّهَٰدَةِ أَنتَ تَحۡكُمُ بَيۡنَ عِبَادِكَ فِي مَا كَانُواْ فِيهِ يَخۡتَلِفُونَ
46. (நபியே! பிரார்த்தனை செய்து) கூறுவீராக: ‘‘எங்கள் இறைவனே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிந்தவனே! உன் அடியார்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் விஷயத்தில் அவர்களுக்கிடையில் நீ தீர்ப்பளிப்பாயாக!''
வசனம் : 47
وَلَوۡ أَنَّ لِلَّذِينَ ظَلَمُواْ مَا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا وَمِثۡلَهُۥ مَعَهُۥ لَٱفۡتَدَوۡاْ بِهِۦ مِن سُوٓءِ ٱلۡعَذَابِ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ وَبَدَا لَهُم مِّنَ ٱللَّهِ مَا لَمۡ يَكُونُواْ يَحۡتَسِبُونَ
47. (நபியே!) அநியாயம் செய்தவர்களுக்குப் பூமியிலுள்ள அனைத்துமே சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப் போன்றதொரு பாகமும் இருந்த போதிலும் மறுமையின் கொடிய வேதனையில் இருந்து அவர்கள் தப்பித்துக்கொள்ள அவை அனைத்தையுமே பரிகாரமாகக் கொடுத்து விடவே நிச்சயமாக விரும்புவார்கள். (எனினும், அது ஆகக்கூடியதல்ல) மேலும், அவர்கள் எதிர்பார்க்காததெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வெளியாகும்.

வசனம் : 48
وَبَدَا لَهُمۡ سَيِّـَٔاتُ مَا كَسَبُواْ وَحَاقَ بِهِم مَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ
48. மேலும், அவர்கள் செய்துகொண்டிருந்த (கெட்ட) செயல்களின் தீமைகள் அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும். அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த வேதனையும் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும்.
வசனம் : 49
فَإِذَا مَسَّ ٱلۡإِنسَٰنَ ضُرّٞ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلۡنَٰهُ نِعۡمَةٗ مِّنَّا قَالَ إِنَّمَآ أُوتِيتُهُۥ عَلَىٰ عِلۡمِۭۚ بَلۡ هِيَ فِتۡنَةٞ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ
49. மனிதனை ஏதும் தீங்கு அணுகும் சமயத்தில், (அதை நீக்கும்படி) நம்மிடமே அவன் பிரார்த்தனை செய்கிறான். (அதை நீக்கி) அவனுக்கு நாம் ஒரு அருள் புரிந்தாலோ, ‘‘தான் அதை அடைந்ததெல்லாம் தன் அறிவின் சாமர்த்தியத்தால்தான்'' என்று கூறுகிறான். (அது சரி) அல்ல; அதுவும் (அவர்களுக்கு) ஒரு சோதனையாகும். ஆயினும், அவர்களில் அதிகமானோர் இதை அறிந்து கொள்வதில்லை.
வசனம் : 50
قَدۡ قَالَهَا ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَمَآ أَغۡنَىٰ عَنۡهُم مَّا كَانُواْ يَكۡسِبُونَ
50. இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், இவ்வாறுதான் கூறிக்கொண்டு இருந்தார்கள். எனினும், அவர்கள் சம்பாதித்து வந்ததில் ஒன்றுமே அவர்களுக்குப் பயனளிக்காமல் போய்விட்டது.
வசனம் : 51
فَأَصَابَهُمۡ سَيِّـَٔاتُ مَا كَسَبُواْۚ وَٱلَّذِينَ ظَلَمُواْ مِنۡ هَٰٓؤُلَآءِ سَيُصِيبُهُمۡ سَيِّـَٔاتُ مَا كَسَبُواْ وَمَا هُم بِمُعۡجِزِينَ
51. அவர்கள் செய்துகொண்டிருந்த (கெட்ட) செயலின் தீமைகள்தான் அவர்களை வந்தடைந்தன. (யூதர்களாகிய) இவர்களிலும் எவர்கள் அநியாயம் செய்கிறார்களோ அவர்களை, அவர்கள் செய்யும் (கெட்ட) செயலின் தீமைகள் அதிசீக்கிரத்தில் வந்தடையும். அவர்கள் (இவ்விஷயத்தில் அல்லாஹ்வைத்) தோற்கடித்துவிட முடியாது.
வசனம் : 52
أَوَلَمۡ يَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ
52. அவர்கள் அறிந்து கொள்ளவில்லையா? அல்லாஹ்தான், தான் நாடியவர்களுக்கு உணவை விரிவாக்குகிறான். (தான் நாடியவர்களுக்குச்) சுருக்கி விடுகிறான். நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
வசனம் : 53
۞ قُلۡ يَٰعِبَادِيَ ٱلَّذِينَ أَسۡرَفُواْ عَلَىٰٓ أَنفُسِهِمۡ لَا تَقۡنَطُواْ مِن رَّحۡمَةِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ يَغۡفِرُ ٱلذُّنُوبَ جَمِيعًاۚ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِيمُ
53. (நபியே!) கூறுவீராக: ‘‘எனது அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்புக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவன், மகா கருணை உடையவன் ஆவான்.
வசனம் : 54
وَأَنِيبُوٓاْ إِلَىٰ رَبِّكُمۡ وَأَسۡلِمُواْ لَهُۥ مِن قَبۡلِ أَن يَأۡتِيَكُمُ ٱلۡعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ
54. ஆகவே, (மனிதர்களே!) உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்னதாகவே, நீங்கள் உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிபட்டு நடங்கள். (வேதனை வந்து விட்டாலோ,) பின்னர் (ஒருவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
வசனம் : 55
وَٱتَّبِعُوٓاْ أَحۡسَنَ مَآ أُنزِلَ إِلَيۡكُم مِّن رَّبِّكُم مِّن قَبۡلِ أَن يَأۡتِيَكُمُ ٱلۡعَذَابُ بَغۡتَةٗ وَأَنتُمۡ لَا تَشۡعُرُونَ
55. (மனிதர்களே!) நீங்கள் அறியாத விதத்தில் திடீரென உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னதாகவே உங்கள் இறைவனால் உங்களுக்கு இறக்கிவைக்கப்பட்ட, (வேதங்களில்) மிக அழகான (இ)தைப் பின்பற்றுங்கள்.
வசனம் : 56
أَن تَقُولَ نَفۡسٞ يَٰحَسۡرَتَىٰ عَلَىٰ مَا فَرَّطتُ فِي جَنۢبِ ٱللَّهِ وَإِن كُنتُ لَمِنَ ٱلسَّٰخِرِينَ
56. (உங்களில்) எவரும், ‘‘அல்லாஹ்வைப் பற்றி நான் (கவனிக்க வேண்டியவற்றைக் கவனிக்காது) தவறிவிட்டேன். என் கேடே! நான் (இவற்றைப்) பரிகாசம் செய்து கொண்டிருந்தேனே!'' என்று கூறாமல் இருப்பதற்காகவும்;

வசனம் : 57
أَوۡ تَقُولَ لَوۡ أَنَّ ٱللَّهَ هَدَىٰنِي لَكُنتُ مِنَ ٱلۡمُتَّقِينَ
57. அல்லது (உங்களில் எவரும்) ‘‘அல்லாஹ் எனக்கு நேரான வழியை அறிவித்திருந்தால், நானும் இறையச்சமுடையவர்களில் ஒருவனாகி இருப்பேன்!'' என்று கூறாமல் இருப்பதற்காகவும்;
வசனம் : 58
أَوۡ تَقُولَ حِينَ تَرَى ٱلۡعَذَابَ لَوۡ أَنَّ لِي كَرَّةٗ فَأَكُونَ مِنَ ٱلۡمُحۡسِنِينَ
58. அல்லது, (உங்களில் எவரும்) வேதனையைக் (கண்ணால்) கண்ட சமயத்தில் ‘‘(இவ்வுலகத்திற்கு) நான் திரும்பிச் செல்ல வழி உண்டா? அவ்வாறாயின் நான் நல்லவர்களில் ஆகிவிடுவேன்'' என்று கூறாமல் இருப்பதற்காகவும் (உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவன் இறக்கிய வேதத்தை பின்பற்றுங்கள்).
வசனம் : 59
بَلَىٰ قَدۡ جَآءَتۡكَ ءَايَٰتِي فَكَذَّبۡتَ بِهَا وَٱسۡتَكۡبَرۡتَ وَكُنتَ مِنَ ٱلۡكَٰفِرِينَ
59. (அவ்வாறு எவனேனும் கூறினால், இறைவன் அவனை நோக்கி,) ‘‘ஆம்! மெய்யாகவே என் வசனங்கள் உன்னிடம் வந்தன, நீ அவற்றைப் பொய்யாக்கினாய், கர்வம் கொண்டாய், அதை நிராகரிப்பவர்களில் இருந்தாய்.'' (என்று கூறுவான்.)
வசனம் : 60
وَيَوۡمَ ٱلۡقِيَٰمَةِ تَرَى ٱلَّذِينَ كَذَبُواْ عَلَى ٱللَّهِ وُجُوهُهُم مُّسۡوَدَّةٌۚ أَلَيۡسَ فِي جَهَنَّمَ مَثۡوٗى لِّلۡمُتَكَبِّرِينَ
60. (நபியே!) மறுமை நாளன்று அல்லாஹ்வின் மீது பொய் கூறும் இவர்களின் முகங்கள் கருத்துப் போயிருப்பதை நீர் காண்பீர். கர்வம் கொண்ட இவர்கள் செல்லுமிடம் நரகத்தில் இல்லையா?
வசனம் : 61
وَيُنَجِّي ٱللَّهُ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ بِمَفَازَتِهِمۡ لَا يَمَسُّهُمُ ٱلسُّوٓءُ وَلَا هُمۡ يَحۡزَنُونَ
61. எவர்கள் (பாவங்களிலிருந்து) முற்றிலும் (முழுமையாக) விலகிக் கொண்டார்களோ அவர்களை ஒரு தீங்கும் அணுகாது அல்லாஹ் பாதுகாத்துக் கொள்வான்; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
வசனம் : 62
ٱللَّهُ خَٰلِقُ كُلِّ شَيۡءٖۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ وَكِيلٞ
62. அல்லாஹ்வே எல்லா பொருள்களையும் படைத்தவன்; அவனே எல்லா பொருள்களின் பொறுப்பாளன்.
வசனம் : 63
لَّهُۥ مَقَالِيدُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِ ٱللَّهِ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡخَٰسِرُونَ
63. வானங்கள், பூமியிலுள்ள (பொக்கிஷம் முதலிய)வற்றின் சாவிகள் அவனிடமே இருக்கிறது. ஆகவே, அல்லாஹ்வின் வசனங்களை எவர்கள் நிராகரிக்கிறார்களோ, அவர்கள்தான் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்கள்!
வசனம் : 64
قُلۡ أَفَغَيۡرَ ٱللَّهِ تَأۡمُرُوٓنِّيٓ أَعۡبُدُ أَيُّهَا ٱلۡجَٰهِلُونَ
64. (நபியே!) கூறுவீராக: ‘‘மூடர்களே! அல்லாஹ் அல்லாதவற்றையா நான் வணங்கும்படி என்னை நீங்கள் ஏவுகிறீர்கள்?''
வசனம் : 65
وَلَقَدۡ أُوحِيَ إِلَيۡكَ وَإِلَى ٱلَّذِينَ مِن قَبۡلِكَ لَئِنۡ أَشۡرَكۡتَ لَيَحۡبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ ٱلۡخَٰسِرِينَ
65. (நபியே!) உமக்கும், (நபிமார்களின்) உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் மெய்யாகவே வஹ்யி மூலம் அறிவிக்கப்பட்டது: (அது என்ன வென்றால், அல்லாஹ்வுக்கு) நீர் இணைவைத்தால், உமது நன்மைகள் அனைத்தும் அழிந்து, நிச்சயமாக நீர் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவீர்.
வசனம் : 66
بَلِ ٱللَّهَ فَٱعۡبُدۡ وَكُن مِّنَ ٱلشَّٰكِرِينَ
66. மாறாக, நீர் அல்லாஹ் ஒருவனையே வணங்குவீராக; அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் ஆகிவிடுவீராக.
வசனம் : 67
وَمَا قَدَرُواْ ٱللَّهَ حَقَّ قَدۡرِهِۦ وَٱلۡأَرۡضُ جَمِيعٗا قَبۡضَتُهُۥ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِ وَٱلسَّمَٰوَٰتُ مَطۡوِيَّٰتُۢ بِيَمِينِهِۦۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ
67. (நபியே!) அல்லாஹ்வின் (மேலான) தகுதிக்குத் தக்கவாறு அவனை அவர்கள் கண்ணியப்படுத்துவதில்லை. பூமி (இவ்வளவு பெரிதாக இருந்த போதிலும் அது) முழுவதும் மறுமையில் அவனுடைய ஒரு கைப்பிடியில் இருக்கும். மேலும், வானங்கள் அனைத்தும் சுருட்டப்பட்டு அவனுடைய வலது கையில் இருக்கும். இவர்கள் இணைவைப்பதை விட்டு அவன் மிக மேலானவன்; அவன் மிக பரிசுத்தமானவன்.

வசனம் : 68
وَنُفِخَ فِي ٱلصُّورِ فَصَعِقَ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَن فِي ٱلۡأَرۡضِ إِلَّا مَن شَآءَ ٱللَّهُۖ ثُمَّ نُفِخَ فِيهِ أُخۡرَىٰ فَإِذَا هُمۡ قِيَامٞ يَنظُرُونَ
68. ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால், வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர, மூர்ச்சித்து மதி இழந்து (விழுந்து அழிந்து) விடுவார்கள். மறுமுறை ஸூர் ஊதப்பட்டால் உடனே அவர்கள் அனைவரும் (உயிர் பெற்று) எழுந்து நின்று (இறைவனை) எதிர் நோக்கி நிற்பார்கள்.
வசனம் : 69
وَأَشۡرَقَتِ ٱلۡأَرۡضُ بِنُورِ رَبِّهَا وَوُضِعَ ٱلۡكِتَٰبُ وَجِاْيٓءَ بِٱلنَّبِيِّـۧنَ وَٱلشُّهَدَآءِ وَقُضِيَ بَيۡنَهُم بِٱلۡحَقِّ وَهُمۡ لَا يُظۡلَمُونَ
69. இறைவனின் ஒளியைக் கொண்டு பூமி பிரகாசிக்கும். (அவரவர்களின்) தினசரிக் குறிப்பு (அவரவர்கள் முன்) வைக்கப்பட்டுவிடும். நபிமார்களையும், இவர்களுடைய (மற்ற) சாட்சியங்களையும் கொண்டுவரப்பட்டு, அவர்களுக்கிடையில் நீதமாகத் தீர்ப்பளிக்கப்படும். (அவர்களுடைய நன்மையில் ஒரு அணுவளவேனும் குறைத்தோ, பாவத்தில் ஒரு அணுவளவேனும் அதிகப்படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
வசனம் : 70
وَوُفِّيَتۡ كُلُّ نَفۡسٖ مَّا عَمِلَتۡ وَهُوَ أَعۡلَمُ بِمَا يَفۡعَلُونَ
70. ஒவ்வொரு மனிதனும், அவன் செய்ததற்குரிய கூலியை முழுமையாகவே அடைவான். அல்லாஹ்வோ, அவர்கள் செய்தவை அனைத்தையும் நன்கறிவான்.
வசனம் : 71
وَسِيقَ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِلَىٰ جَهَنَّمَ زُمَرًاۖ حَتَّىٰٓ إِذَا جَآءُوهَا فُتِحَتۡ أَبۡوَٰبُهَا وَقَالَ لَهُمۡ خَزَنَتُهَآ أَلَمۡ يَأۡتِكُمۡ رُسُلٞ مِّنكُمۡ يَتۡلُونَ عَلَيۡكُمۡ ءَايَٰتِ رَبِّكُمۡ وَيُنذِرُونَكُمۡ لِقَآءَ يَوۡمِكُمۡ هَٰذَاۚ قَالُواْ بَلَىٰ وَلَٰكِنۡ حَقَّتۡ كَلِمَةُ ٱلۡعَذَابِ عَلَى ٱلۡكَٰفِرِينَ
71. (அந்நாளில்) நிராகரித்தவர்கள் அனைவரும், கூட்டம் கூட்டமாக நரகத்தின் பக்கம் ஓட்டி வரப்படுவார்கள். (அதன் சமீபமாக) அவர்கள் வந்தவுடன், அதன் வாயில்கள் திறக்கப்பட்டுவிடும். அதன் காவலாளர்கள் அவர்களை நோக்கி, ‘‘உங்களில் இருந்து அல்லாஹ்வுடைய தூதர்கள் உங்களிடம் வரவில்லையா? உங்கள் இறைவனுடைய வசனங்களை அவர்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கவில்லையா? இந்நாளை நீங்கள் சந்திக்க வேண்டியதைப் பற்றி, அவர்கள் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவில்லையா?'' என்று கேட்பார்கள். அதற்கவர்கள் ‘‘ஆம்! (வந்தார்கள்)'' என்றே சொல்வார்கள். (ஆயினும், அது பயன் அளிக்காது. ஏனென்றால்,) நிராகரிப்பவர்களுக்கு வேதனையைப் பற்றிய தீர்ப்பு உறுதியாகி விட்டது.
வசனம் : 72
قِيلَ ٱدۡخُلُوٓاْ أَبۡوَٰبَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَاۖ فَبِئۡسَ مَثۡوَى ٱلۡمُتَكَبِّرِينَ
72. ஆகவே, ‘‘நரகத்தின் வாயில்களில் நீங்கள் நுழைந்து விடுங்கள். என்றென்றுமே நீங்கள் அதில் தங்கிவிடுங்கள்'' என்று கூறப்படும். ஆகவே, கர்வம்கொண்ட (இ)வர்கள் தங்குமிடம் மகா கெட்டது.
வசனம் : 73
وَسِيقَ ٱلَّذِينَ ٱتَّقَوۡاْ رَبَّهُمۡ إِلَى ٱلۡجَنَّةِ زُمَرًاۖ حَتَّىٰٓ إِذَا جَآءُوهَا وَفُتِحَتۡ أَبۡوَٰبُهَا وَقَالَ لَهُمۡ خَزَنَتُهَا سَلَٰمٌ عَلَيۡكُمۡ طِبۡتُمۡ فَٱدۡخُلُوهَا خَٰلِدِينَ
73. எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொண்டிருந்தார்களோ அவர்கள் (அந்நாளில்) கூட்டம் கூட்டமாகச் சொர்க்கத்தின் பக்கம் அழைத்து வரப்படுவார்கள். அதன் சமீபமாக அவர்கள் வரும் சமயத்தில், அதன் வாயில்கள் திறக்கப்பட்டு, அதன் காவலாளர்கள் அவர்களை நோக்கி, ‘‘உங்கள் மீது ஸலாம் உண்டாவதாகுக! நீங்கள் பாக்கியவான்களாகி விட்டீர்கள். நீங்கள் இதில் நுழைந்து, என்றென்றும் இதில் தங்கிவிடுங்கள்'' என்று கூறுவார்கள்.
வசனம் : 74
وَقَالُواْ ٱلۡحَمۡدُ لِلَّهِ ٱلَّذِي صَدَقَنَا وَعۡدَهُۥ وَأَوۡرَثَنَا ٱلۡأَرۡضَ نَتَبَوَّأُ مِنَ ٱلۡجَنَّةِ حَيۡثُ نَشَآءُۖ فَنِعۡمَ أَجۡرُ ٱلۡعَٰمِلِينَ
74. அதற்கவர்கள், ‘‘புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! அவன் தன் வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்தான். சொர்க்கத்தில் நாங்கள் விரும்பிய இடமெல்லாம் சென்றிருக்க அதன் பூமியை எங்களுக்குச் சொந்தமாக்கி வைத்தான்'' என்று கூறுவார்கள். நன்மை செய்தவர்களின் கூலி இவ்வாறு நன்மையாகவே முடியும்.

வசனம் : 75
وَتَرَى ٱلۡمَلَٰٓئِكَةَ حَآفِّينَ مِنۡ حَوۡلِ ٱلۡعَرۡشِ يُسَبِّحُونَ بِحَمۡدِ رَبِّهِمۡۚ وَقُضِيَ بَيۡنَهُم بِٱلۡحَقِّۚ وَقِيلَ ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ
75. (நபியே! அந்நாளில்) வானவர்கள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து, துதி செய்தவண்ணம் ‘அர்ஷை' சூழ்ந்து நிற்பதை நீர் காண்பீர். அச்சமயம் அவர்களுக்கிடையில் நியாயமாகவே தீர்ப்பளிக்கப்பட்டு, ‘‘அகிலத்தார் அனைவரின் இறைவனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் சொந்தமானது'' என்று (அனைவராலும் துதி செய்து புகழ்ந்து) கூறப்படும்.
வெற்றிகரமாக அனுப்பப்பட்டது